'ஒரு தலைமுறையை வாழ வைக்கும் பயிர்' எண்ணெய் பனை 15 ஹெக்டேரில் சாகுபடி

கரூர்:நாட்டின் சமையல் எண்ணெய் தேவைகளை பூர்த்தி செய்வது பாமாயில் எனப்படும் எண்ணெய் பனையே. தாவர எண்ணெய்யான இதனால் எவ்வித கெடுதலும் இல்லை. இதன்
உற்பத்தியை பெருக்க மத்திய அரசு, 60 சதவீதமும், மாநில அரசு, 40 சதவீதமும் நிதி ஒதுக்கீடு செய்கிறது.

இந்திய அளவில் எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் பயிர்களில் முதலிடம் பிடிப்பது எண்ணெய் பனையாகும். இது சமையலுக்கு மட்டுமின்றி, அழகு சாதன பொருட்களாகவும், சில இடங்களில் வேறு சில பொருட்களுடன் கலவையான எரிபொருளாகவும் பயன்படுகிறது.எண்ணெய் பனை, ஒரு ஹெக்டேருக்கு, 143 மரங்கள் வரை நடவு செய்யலாம். ஒரு மரத்தில், ஆண்டுக்கு, 12 குலைகள் வரை அறுவடை செய்யலாம். ஒரு குலையின் சராசரி எடை, 25 கிலோ. இதன் மூலம், ஒரு ஹெக்டேருக்கு, 42.9 டன் பழங்களை அறுவடை செய்வதால் குறைந்தபட்சம், 5 லட்சத்து, 46,000 ரூபாய் வரை வருமானம் ஈட்டலாம். இதன் மூலம், 25 முதல், 30 ஆண்டுகளுக்கு நிலையான மாத வருமானம் பெறமுடியும். எனவே தான் இதை, 'தலைமுறையை வாழ வைக்கும் பயிர்' என்கின்றனர்.
கரூர் மாவட்டத்தில், கிருஷ்ணராயபுரம், தோகைமலை உள்பட பல்வேறு பகுதியில், 15 ஹெக்டேர் பரப்பளவில் பாமாயில் சாகுபடி நடக்கிறது. இந்த பயிருக்கு நிலத்தில் எப்போதும் ஈரப்பதம் இருக்க வேண்டும் என்பதால். சொட்டுநீர் பாசனமே சிறந்தது. இதை பயிரிடும் விவசாயிக்கு கிணறு வெட்ட, ஆழ்துளை கிணறு அமைக்க, மின் மோட்டார் வாங்க, சொட்டுநீர் பாசனம் அமைக்க, அறுவடை உளி வாங்க அரசால் மானியம் வழங்கப்படுகிறது.
இந்த மாவட்டத்தில், எண்ணெய் பனை சாகுபடிக்கு ஏற்ற நிலங்கள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் உள்ளன. நெல், கரும்பு மற்றும் காய்கறி பயிர்களை தாண்டி இதுபோன்ற பயிர் வளர்ப்பில் கவனம் செலுத்துவது காலத்தின் கட்டாயம். இதற்கு உரிய வழிகாட்டுதல்களை, தோட்டக்கலை துறையினர் ஆர்வத்துடன் வழங்கி வருகின்றனர்.

Advertisement