அரசு மருத்துவமனையில் ஆய்வகத்தில் தினமும் காத்திருக்கும் நோயாளிகள்
கம்பம், ஜுன் 13
கம்பம் அரசு மருத்துவமனை ஆய்வகத்தில் தினமும் 200 பேர்களுக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்வதால் போதிய டெக்னீசியன்கள் இல்லாததால் நோயாளிகள் பல மணி - நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது.
கம்பம் அரசு மருத்துவமனையில் தினமும் வெளிநோயாளிகளாக 1200 பேர் வருகின்றனர். 200 க்கும் மேற்பட்டவர்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். சீமாங் சென்டரில் தினமும் 2 முதல் 4 பிரசவங்கள் நடைபெறுகிறது. எனவே தினமும் கர்ப்பிணிகளுக்கு ஹீமோகுளோபின்,சிறுநீரில் அல்புமின், உப்பு, கிரியாட்டின், பிளேட்லெட் கவுண்ட், சர்க்கரை ஆகியவை பரிசோதிப்பது போன்ற சோதனைகள் நடக்கிறது. மேலும் வழக்கமாக நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பு, கல்லீரல் டெஸ்ட் சளி பரிசோதனைகளும் பரிசோதனை செய்ய வேண்டும்.
ஆனால் இங்குள்ள ஆய்வகத்தில் இரு டெக்னீசியன்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவருக்கு இரவுப் பணி. டி.பி.பிரிவு மற்றும் எச்.ஐ.வி. பிரிவு டெக்னிசியன்கள் மீட்டிங் உள்ளிட்ட வேலைகள் என சென்று விடுகின்றனர்.
ஒரு டெக்னீசியன் எவ்வாறு 200 பேர்களுக்கு ரத்தம், சிறுநீர், சளி பரிசோதனைகள் செய்ய முடியும். இதனால் ஆய்வகம் முன் தினமும் 50 க்கும் மேற்பட்டவர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது ,
எனவே கம்பம் அரசு மருத்துவமனை ஆய்வகத்தை தரம் உயர்த்தி கூடுதல் டெக்னீசியன்களை நியமனம் செய்ய வேண்டும். அல்லது மற்றொரு ஆய்வகம் அமைக்க இணை இயக்குநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.