பஸ் டிரைவர் – பெண்கள் மோதல் வீடியோ வைரல்: போலீஸ் விசாரணை
பண்ருட்டி: பண்ருட்டி பஸ்நிலையத்தில் அரசு பஸ் டிரைவர் மற்றும் பெண்கள் மோதிய விவகாரம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பண்ருட்டி அடுத்த முத்தாண்டிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி,49; அரசு பஸ் டிரைவர். இவர் நேற்று முன்தினம் காலை 10:30 மணிக்கு அக்கடவல்லி – பண்ருட்டி நோக்கி பஸ்சை ஓட்டி வந்தார்.
புதுப்பேட்டை பஸ் நிறுத்தத்தில் பஸ்சின் அருகில் பைக்கில் விபத்து ஏற்படுத்தும் வகையில் வந்தவரை அசிங்கமாக டிரைவர் திட்டினார். அப்போது பஸ்சில் ஏறிய தொரப்பாடி பகுதியை சேர்ந்த கணேசன் மனைவி தமிழ்,45; உள்ளிட்ட பெண்கள், தங்களை தான் டிரைவர் திட்டுவதாக நினைத்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின் பஸ் நிலையத்தில் டிரைவர் பஸ்சை விட்டு வெளியே வந்த போது அங்கு இறங்கிய தமிழ் உள்ளிட்ட பெண்கள் டிரைவர் பழனிசாமியை அசிங்கமாக திட்டி, காலணி உள்ளிட்ட பொருட்களால் அவரை தாக்கினர். அப்போது டிரைவர் பழனிசாமி அந்த பெண்ணை தாக்கினார். இதில் பழனிசாமி பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து அவர், பண்ருட்டி போலீசில் அந்த பெண் உள்ளிட்ட 10 பேர் மீது புகார் செய்தார்.
இந்நிலையில் பெண்கள் கும்பலாக டிரைவரை தாக்கிய வீடியோவும், டிரைவர் பழனிசாமி, தமிழை தாக்கிய வீடியோவும் வைரலானது. இதுகுறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் இருதரப்பினரிடமும், விசாரணை நடத்தி வருகிறார்.