பதவி பவிசுக்காக போகிறவர்கள் பற்றி எங்களுக்கு கவலை இல்லை பனையூர் பாபு குறித்து அமைச்சர் கருத்து

திண்டிவனம்: ‘பதவி பவிசுக்காக போகிறவர்கள் பற்றி எங்களுக்கு கவலை இல்லை’ என தி.மு.க.,வில் இணைந்த பனையூர் பாபு  குறித்து அமைச்சர் வன்னி அரசு கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திண்டிவனத்தில் அவர் நேற்று, நிருபர்களிடம் கூறியதாவது:

ஆணவப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்துவதற்குத் தனிச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என வரும் சட்டசபை தொடரில் வலியுறுத்துவேன், கட்டாயம் இதைக் கொண்டு வருவதற்கு முழு முயற்சி எடுப்போம்.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம், பெண்கள் மத்தியில் ஒரு உத்வேகத்தை உருவாக்கக்கூடிய ஒரு திட்டமாகப் பார்க்கிறோம். தமிழ்நாட்டில் இன்றைக்கு வெறுப்பு அரசியலை விதைப்பவர்கள் யார் என்று தெரியும். ஒரு இனத்தின் மீது, ஒரு சமூகத்தின் மீது, ஒரு மதத்தின் மீது தமிழ்நாட்டில் தொடர்ந்து வெறுப்பு அரசியலை விதைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதை சனாதன கும்பல் செய்கின்றனர்.

பனையூர் பாபு  எங்கிருந்து வந்தாரோ அங்கு போய் சேர்ந்திருக்கிறார். விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் என்பது ஒரு  வலிமையான கொள்கைக் கோட்பாடோடு இயங்குகிற இயக்கம். ஜெயிலுக்குப் போறவங்க வாங்க, எம்.எல்.ஏ., ஆகணும், எம்.பி., ஆகணும்னு வர்றவங்க இந்த இயக்கத்துக்கு வர வேண்டாம் என்று கூறியவர் திருமாவளவன். ஆதாயத்திற்காக, பதவி பவிசுக்காக வருபவர்கள் போவார்கள், வருவார்கள், போய்விடுவார்கள். போகிறவர்களைப் பற்றி எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை.

இந்த இயக்கம் கொள்கை சார்ந்து மக்களுக்காக நிற்கக்கூடிய இயக்கம். ஆதாயத்திற்காக வருகிறவர்களைப் பற்றி கவலை இல்லை.

இவ்வாறு அமைச்சர் வன்னி அரசு கூறினார்.

Advertisement