ஐ.ஏ.எஸ்., ரோகிணி, ஐ.பி.எஸ்., ரூபா மோதல் சமரசம் செய்ய ஓய்வு நீதிபதி குரியன் நியமனம்

பெங்களூரு: ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரோகிணி சிந்துாரி, ஐ.பி.எஸ்., அதிகாரி ரூபா மவுத்கில் பரஸ்பரம் தாக்கல் செய்துள்ள, மானநஷ்ட வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததுடன், இருவர் மீதும் அதிருப்தி தெரிவித்தது.

இந்த வழக்கை மத்தியஸ்தம் மூலம் முடித்து வைக்க, உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப், மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கர்நாடகாவின் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரோகிணி சிந்துாரி, ஐ.பி.எஸ்., அதிகாரி ரூபா மவுத்கில் இடையே, பல விஷயங்களில் பனிப்போர் நடக்கிறது.

சமூக வலைதளங்கள் வழியாக, ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டி, அரசுக்கும் பல முறை தர்மசங்கடத்தை ஏற்படுத்தினர். இப்பனிப்போர், 2023ல் உச்ச கட்டத்தை எட்டியது.

ரூபா கேள்வி ரோகிணி சிந்துாரியின் அந்தரங்க புகைப்படங்களை எடுத்து, தன் சமூக வலைதள பக்கத்தில், 2023 பிப்ரவரி 18ல் ரூபா வெளியிட்டார்.

இவற்றில் இரண்டு, மூன்று படங்களை, ஐ.ஏ.எஸ்., ஆண் அதிகாரிகளுக்கு, ரோகிணியே அனுப்பியுள்ளார், இது ஓர் உயர் அதிகாரிக்கு உகந்த செயலா என ரூபா, அதில் கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ரோகிணி சிந்துாரி, 'என் வாட்ஸாப் ஸ்டேட்டஸில் வைத்திருந்த படங்களை, ரூபா எடுத்திருக்கிறார்.

'சில ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு, எனது தனிப்பட்ட படங்களை, நானே அனுப்பியதாக கூறியுள்ளார். அந்த அதிகாரிகளின் பெயர்களை, ஏன் வெளியிடவில்லை. ரூபா, மனநிலை சரியில்லாதவர்' என குற்றஞ்சாட்டினார்.

தன் மீது, பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தி, தன் கவுரவத்தை குலைப்பதாக ரூபா மீது, ரோகிணி சிந்துாரி மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார்.

இதை ரத்து செய்ய கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், ரூபா மனு தாக்கல் செய்தார். அங்கு மனு தள்ளுபடியானதால், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இரண்டு அதிகாரிகள் இடையே சமரசம் செய்வது குறித்து பரிசீலிக்கும்படி, அரசுக்கு உத்தரவிட்டது. சமூக ஊடகங்களில் ரோகிணி சிந்துாரி தொடர்பான, 'போஸ்ட்'களை அழிக்கும்படி, ரூபாவுக்கு உத்தரவிட்டது. அவரும் அதன்படி அழித்திருந்தார்.

கடந்த, 2024 டிசம்பர் 9ல், கீழ்நிலை நீதிமன்றத்தில் புதிதாக புகார் அளித்த ரூபா, தன்னை மனநலம் பாதித்தவரை போன்று சித்தரிப்பதாக, ரோகிணி சிந்துாரி மீது குற்றஞ்சாட்டி இருந்தார். நீதிமன்றமும் வழக்கு பதிவு செய்து, ரோகிணிக்கு, 'நோட்டீஸ்' அனுப்பியது.

மேல்முறையீடு இதை ரத்து செய்ய கோரி, உயர் நீதிமன்றத்தில் ரோகிணி மனு தாக்கல் செய்திருந்தார். மனு தள்ளுபடி ஆனதால், அவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.

ரூபா மற்றும் ரோகிணியின் மனுக்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ் சந்திர சர்மா, சஞ்சித் சச்தேவ் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தன. வாத, பிரதிவாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இரண்டு மூத்த அதிகாரிகளுக்கு இடையே, 2023ம் ஆண்டில்இருந்து சட்டப்போராட்டம் நடக்கிறது. இவர்களின் மோதல் வருத்தம் அளிக்கிறது. இனியும் சட்டப்போராட்டம் தொடர்ந்தால், இருவரின் தொழில் வாழ்க்கை பாதிக்கப்படும்.

இருவரும் மிக சிறந்த அதிகாரிகள். பரஸ்பரம் குற்றம்சாட்டி கொண்டு, தொழில் வாழ்க்கையை பாழாக்குகின்றனர். இந்த வழக்கை மத்தியஸ்தம் மூலம் முடித்து வைக்கலாம். உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டுள்ளார். மனுதாரர்கள், அவரது முன்னிலையில் ஆஜராக வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்டனர்.

அதுவரை, 'அதிகாரிகள் தொடர்ந்துள்ள மனு மீதான விசாரணைக்கு, இடைக்கால தடை விதிக்கப்படுகிறது' என, நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement