லாரி தகுதி சான்றிதழ் வழங்க ரூ.5800 லஞ்சம்: ஆய்வாளர் கைது வாகன ஆய்வாளர் கைது
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் லாரிக்கு தகுதி சான்றிதழ் வழங்க ரூ.5800 லஞ்சம் வாங்கிய மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முக ஆனந்தை 42, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் வழக்கறிஞர் சவுந்தரராஜன் 42. இவர் தனது உறவினர் லாரிக்கு தகுதி சான்றிதழ் பெற ஜூன் 10ல் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தார்.
வாகனத்தை அலுவலகத்திற்கு கொண்டு சென்ற வழக்கறிஞரிடம் மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முகஆனந்த் சான்றிதழ் வழங்க ரூ.5800 லஞ்சமாக கேட்டார்.
லஞ்ச ஒழிப்பு போலீசில் சவுந்தரராஜன் புகார் செய்தார்.
அவர்கள் அறிவுரைப்படி பணம் கொடுக்க வந்தபோது புரோக்கர் ஹக்கீமிடம் கொடுக்கும் படி கூறினார்.
அதன்படி சவுந்தரராஜன் புரோக்கரிடம் பணம் கொடுத்தார்.
அதை வாங்கிய ஹக்கீம் பணத்தை பெற்றுக்கொள்ளும்படி சண்முகஆனந்திடம் கேட்டார். அவர் மைதானத்தில் நின்ற கிரேன் வாகன டிரைவர் வாஜித்அலியிடம் கொடுக்கும்படி கூறினார். அதன்படி வாஜித் அலியிடம் ஹக்கீம் பணத்தை கொடுத்தார். அவரிடமிருந்து சண்முகஆனந்த் பணத்தை பெற்றார். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., நாகராஜ், இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி தலைமையிலான போலீசார் சண்முக ஆனந்ததை கைது செய்தனர். ஹக்கீம், வாஜித் அலியிடமும் விசாரணை நடக்கிறது.