தர்மஸ்தலா கோவில் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த சதி; நடிகர் பிரகாஷ் ராஜ் பெயர் வந்தது எப்படி?

34

பெங்களூரு: தர்மஸ்தலா சதி வழக்கின் முக்கியக் குற்றவாளியான சின்னையா தாக்கல் செய்த ரிட் மனுவில் நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் பெயர் இடம் பெற்றுள்ளது. 'இது, தீய எண்ணம் கொண்டவர்களால் புனையப்பட்ட கதை என்று பிரகாஷ் ராஜ்' தெரிவித்துள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ள தர்மஸ்தலா மஞ்சுநாத சுவாமி கோவில், பல நுாறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது. உலகம் முழுவதும் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர். இந்த கோவிலின் முன்னாள் ஊழியரான சின்னையா, 'நேத்ராவதி ஆற்றின் கரையில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பலரது சடலங்களை புதைத்தேன்' என்று கூறி சர்ச்சையை உண்டாக்கினார்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. சின்னையா கூறியபடி பல இடங்களில் தோண்டப்பட்ட போதிலும், சடலங்கள் புதைக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. பல கட்ட விசாரணையில், அவர் கூறியது பொய் என்றும், கோவிலின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் அவ்வாறு கூறியதும் அம்பலமானது.

அவரது புகாரின் நோக்கம், கோவிலுக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சியின் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், 'தர்மஸ்தலா கோவிலின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலான ஒரு பெரிய சதியில், தான் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டதாக' நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் சின்னையா குற்றம் சாட்டியுள்ளார்.

நடிகர் பிரகாஷ் ராஜ் மற்றும் செயல்பாட்டாளர்கள் சிலரது பெயரை அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். கோயிலுக்கு எதிரான பிரசாரத்திற்கு 200 கோடி ரூபாய் நிதியுதவியுடன் கூடிய சதித்திட்டம் தீட்டப்பட்டதாக சின்னையா அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

சின்னையாவின் மனுவில் தன் பெயர் இடம் பெற்றது தொடர்பான விவகாரத்துக்கு பதிலளித்த நடிகர் பிரகாஷ் ராஜ், 'தீய எண்ணம் கொண்டவர்களால் பரப்பப்படும் புனையப்பட்ட கதைகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும்' என்று எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

தற்போது வெளியூரில் இருப்பதாகவும், விரைவில் ஊர் திரும்பியவுடன் செய்தியாளர் சந்திப்பை நடத்தி, தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது பற்றி பேட்டியளித்த கர்நாடகா அமைச்சர் பிரியங்க் கார்கே கூறியதாவது:
அவசரப்பட்டு எந்த ஒரு முடிவுக்கும் வருவதைத் தவிர்க்க வேண்டும். ஒருவருடைய பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதாலேயே அவரை ஒரு குற்றவாளியாகக் கருதிவிட முடியாது. ஜூன் 29க்குள் விசாரணை குறித்த அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு சிறப்பு விசாரணைக் குழுவிற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது நீதிமன்றத்தின் கண்காணிப்பில் நடைபெறும் விசாரணை. சிறப்பு விசாரணைக் குழுவிடம் நீதிமன்றம் சில கேள்விகளை எழுப்பியுள்ளது; அக்குழுவின் தலைவர் அவற்றுக்குப் பதிலளிப்பார். இவ்வழக்கு குறித்துப் பொதுவெளியில் விவாதிக்க முடியாது.
இவ்வாறு அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியான பாஜக இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என்று எம்எல்ஏ சுனில் குமார் வலியுறுத்தியுள்ளார்.

ஒரு முக்கிய ஹிந்து மத வழிபாட்டுத் தலத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க அரசு அனுமதித்ததாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், "இதன் பின்னணி பற்றி தெரிந்துகொள்ளும் உரிமை மக்களுக்கு உண்டு" என்று கூறினார்.

Advertisement