காத்திருப்பு
மாவட்டத்தில் அரசு வீடு வழங்கும் திட்டத்தில் தேர்வான பயனாளிகள்... கடந்த ஆட்சியில் தயாரான பட்டியலுக்கு ஆணை வழங்கப்படுமா?
–நமது நிருபர்–: விழுப்புரம் மாவட்டத்தில் அரசு வீடு வழங்கும் திட்டத்தில், கடந்த ஆட்சியின் இறுதியில் தயாரான பட்டியலின் அடிப்படையில் பணி ஆணை வழங்கப்படுமா என பயனாளிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தமிழக கிராமப்புறங்களில் உள்ள குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்ற, மாநில அரசு அ.தி.மு.க., ஆட்சியில் பசுமை வீடு திட்டம் என்ற பெயரிலும் தி.மு.க., ஆட்சியில் கலைஞர் கனவு இல்லம் திட்டம் என்ற பெயரிலும் செயல்படுத்தப்பட்டது. இதேபோன்று, மத்திய அரசு பிரதமரின் வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மாநில அரசு திட்டத்தில் வீடு கட்டுவதற்கு 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. மத்திய அரசு திட்டத்தில் வீடு கட்ட 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.
இந்த இரு திட்டங்களும், கிராமப்புறங்களில் உள்ள ஏழை, எளிய மக்கள் குடிசை வீடுகளில் இருந்து கான்கிரீட் வீடுகளுக்கு மாற்ற வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் ஆண்டிற்கு நுாற்றுக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர்.
தி.மு.க., ஆட்சியில் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் மாவட்டத்தில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டுவதற்கு பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
அந்தந்த பி.டி.ஓ., அலுவலகங்கள் மூலம் கிராமங்களில் குடிசை வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டது. அந்த பட்டியலின்படி, ஒரு கிராமத்திற்கு 10 மற்றும் அதற்கு மேற்பட்ட வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து, வீடு கட்டுவதற்கு தேவையான ஆவணங்கள் பெறப்பட்டு, வீடு கட்டும் இடம் மற்றும் பயனாளிகளின் போட்டோக்களும் அந்தந்த ஊராட்சி செயலாளர்கள் மூலம் எடுக்கப்பட்டது. பி.டி.ஓ., அலுவலக அதிகாரிகளும், சம்மந்தப்பட்ட கிராமங்களில் சென்று பயனாளிகள் பட்டியலையும் ஆய்வு செய்தனர்.
இந்த பணிகள் முழுமையாக முடிந்த நிலையில், வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டனர். தங்களுக்கு வீடு ஒதுக்கப்படுவது உறுதியானதால், பயனாளிகளும் கட்டுமான பணிக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டனர்.
அந்த சூழ்நிலையில் திடீரென சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனால், பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்காமல் பி.டி.ஓ., அலுவலகங்கள் மூலம் கிடப்பில் போடப்பட்டது.
தற்போது புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், தேர்வான அரசு வீடு கட்டும் திட்டத்தில் தேர்வான பயனாளிகள் தங்களுக்கு பணி ஆணை வழங்கப்படுமா என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
எனவே, மாவட்டத்தில் கடந்த ஆட்சியின் இறுதியில் தயார் செய்யப்பட்ட அரசு வீடு வழங்கும் திட்ட பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.