விளையாட்டு மாநில மகளிர் கிரிக்கெட் 221 ரன் வித்தியாசத்தில் செங்கல்பட்டு அணி வெற்றி

சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், மகளிருக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகள், தமிழகத்தின் பல்வேறு மைதானங்களில் நடந்து வருகின்றன.

அந்த வகையில், செங்கல்பட்டில் நடந்த லீக் போட்டியில், அரியலுார் அணியை செங்கல்பட்டு அணி எதிர்கொண்டது. தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய கவுரி லட்சுமி, 18, அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 119 பந்துகளில் 130 ரன்கள் குவித்து, அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

அவருக்கு துணையாக திவ்யா 33 ரன்களும், ஹரிபிரியா 27 ரன்களும் சேர்த்தனர். இதனால் செங்கல்பட்டு அணி, 44 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 288 ரன்கள் குவித்தது.

அடுத்து விளையாடிய அரியலுார் அணி, தொடக்கம் முதலே செங்கல்பட்டு அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. அபர்ணா, அதிகபட்சமாக 29 ரன்கள் எடுத்த நிலையில், மற்ற வீராங்கனையர் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அரியலுார் அணி 33 ஓவர்களில் 67 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் செங்கல்பட்டு அணி 221 ரன்கள் வித்தியாசத்தில், அபார வெற்றி பெற்று அசத்தியது.

Advertisement