ஜமாபந்தியில் பெறப்படும் மனுக்களுக்கு உடனடி தீர்வு காண கலெக்டர் அறிவுறுத்தல்
திருக்கோவிலுார்: ஜமாபந்தியில் பெறப்படும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் பத்மஜா வருவாய்த்துறை அலுவலர்களை அறிவுறுத்தினார்.
திருக்கோவிலுார் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி துவக்க விழா நடந்தது. தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். கள்ளக்குறிச்சி கலெக்டர் பத்மஜா தலைமை தாங்கி, ஜமாபந்தியை துவங்கி வைத்து பொது மக்களிடமிருந்து 140 மனுக்களை பெற்றார். இதில் முழு புலன் பட்டா மாற்றம் குறித்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு பயனாளிகளுக்கு அதற்கான ஆணை வழங்கப்பட்டது.
இது தொடர்பாக கலெக்டர் பத்மஜா கூறியதாவது; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1435ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி அனைத்து தாலுகாக்களிலும் இன்று துவங்குகிறது. அரசு விடுமுறை மற்றும் சனி, ஞாயிறு விடுமுறை தினங்களை தவிர்த்து மற்ற தினங்களில் நடைபெறும் ஜமாபந்தியில் பொதுமக்கள் மனுக்களை அளித்து பயன்பெறலாம். பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வருவாய் தீர்வாய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என கூறினார். நிகழ்ச்சியின் போது வருவாய் துறை அலுவலர்கள் உள்ளிருந்தனர்.