கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் சேர்ந்து நிதியுதவி பெற அழைப்பு

விழுப்புரம்: கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தின் கீழ் உறுப்பினர்களாக சேர்ந்து நிதியுதவி பெற்று பயன்பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விழுப்புரம் சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் மீனாட்சி செய்திக்குறிப்பு:

தொழிலாளர் நலத்துறையின் கீழ் தமிழக கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம், தமிழக உடலுழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் இதர 15 நலவாரியங்கள், தமிழக அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நலவாரியம் உள்ளிட்ட 18 நலவாரியங்கள் உள்ளன. அவற்றில் 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட தொழிலாளர்கள் தங்களின் தொழிலின் அடிப்படையில் உரிய நலவாரியங்களின் கீழ் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம்.

தங்களுடைய பதிவு விண்ணப்பம் தொழிலாளர் உதவி ஆணையர் இணையதளத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டபின் தங்களின் மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

ஒப்புதலுக்கு பின் அருகிலுள்ள இ சேவை மையங்கள் அல்லது சி.எஸ்.சி., மையங்களில் https://tnuwwb.tn.gov.in/users/login என்ற இணையதள பக்கத்தில் உறுப்பினர் அடையாள அட்டையினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவு பெற்ற தொழிலாளர்கள் கல்வி, திருமணம், மகப்பேறு கண் கண்ணாடி, வீட்டுவசதி திட்டம், ஓய்வூதியம், இயற்கை மரணம் மற்றும் விபத்து மரணம் போன்ற நிதியுதவி கோரி https://tnuwwb.tn.gov.in/என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். பெறப்பட்ட தகுதியான விண்ணப்பங்கள் ஒப்பளிக்கப்பட்டு நிதியுதவி தொகைகள் தொழிலாளர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது.

விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்களின் வகையை பொறுத்து அதிகபட்சம் 8 லட்சம் ரூபாய் வரை நிதியுதவி தொழிலாளர் நலவாரியங்களின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இது குறித்து சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் அலுவலகத்தை 04146- 222692 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது விழுப்புரம் வி.மருதுாரில் உள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகத்தை நேரடியாகவோ தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement