அரசு பள்ளி மாணவர்கள் 10 பேருக்கு விபத்து காப்பீடு வைப்பு பத்திரம் வழங்கல் 

கள்ளக்குறிச்சி: மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் 10 பேருக்கு ரூ.7.50 லட்சம் மதிப்பில் விபத்து காப்பீடு வைப்பு பத்திரத்தை கலெக்டர் வழங்கினார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளிக் கல்வி துறை சார்பில் அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் பத்மஜா தலைமை தாங்கினார். கூட்டத்தில் கடந்த மார்ச் 2026ல் நடந்த பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் பள்ளி வாரியாக தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளிகளுக்கு, இவ்வாண்டு தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.

மாணவர்கள் வருகையை அதிகரித்து, இடைநிற்றலை குறைக்க தேவையான தொடர் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கடந்த கல்வியாண்டில் 100 சதவீதம் தேர்ச்சி அளித்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பாராட்டு தெரிவித்து, வரும் கல்வியாண்டில் அனைத்து பள்ளிகளும் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

பின்னர் அரசு பள்ளிகளில் 1 ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களின் வருவாய் ஈட்டும் தாய் அல்லது தந்தை விபத்தில் இறந்தாலோ, நிரந்தர முடக்கம் அடைந்தாலோ கல்வி பராமரிப்பு செலவிற்காக தமிழக மின்விசை மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் மூலம் காப்பீடு செய்து ரூ.75 ஆயிரத்திற்கான கால வைப்பு பத்திரம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி சங்கராபுரம், உளுந்துார்பேட்டை, தியாகதுருகம் ஆகிய பகுதிகளில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் 10 பேருக்கு தலா 75 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் விபத்து காப்பீடு வைப்பு பத்திரம் வழங்கப்பட்டது.

முன்னதாக சி.இ.ஓ.,வின் நேர்முக உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற செந்தில்குமார், ஓய்வு பெற்றமைக்காக தனக்கு அன்பளிப்பாக வழங்கப்பெற்ற ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்களை தான் பணியாற்றி 8 பள்ளிகளின் நுாலகத்திற்கு வழங்கிடும் பொருட்டு புத்தகங்களை கலெக்டர் பத்மஜாவிடம் வழங்கினார். கூட்டத்தில் சி.இ.ஓ., கார்த்திகா, பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement