என்ன வழக்கு என்றுகூட தெரியாமல் ஆஜரான மாநகராட்சி அதிகாரிக்கு ஆணையம் கண்டிப்பு
சென்னை: வழக்கு தொடர்பான அடிப்படை விபரங்கள்கூட தெரியாமல் விசாரணைக்கு ஆஜரான, ஆவடி மாநகராட்சி உதவி பொறியாளருக்கு, மாநில தகவல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆவடியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். கடந்த 2023ல் தகவல் அறியும் சட்டத்தின்கீழ், ஆவடி மாநகராட்சியில் உள்ள பூங்காக்கள், அவற்றின் இருப்பிடங்கள், திறக்கப்பட்ட தேதி உள்ளிட்ட விபரங்களை கோரியிருந்தார். களஆய்வுக்கும் அனுமதி கேட்டிருந்தார்.
உரிய தகவல்கள் வழங்காததால், மாநில தகவல் ஆணையத்தில் மேல் முறையீடு செய்தார். இதையடுத்து, 2024-ல் தகவல் ஆணையம், தகவல்களை வழங்க உத்தரவிட்டது.
ஆனால், அந்த உத்தரவை மாநகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளாததால், கார்த்திகேயன் மீண்டும் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை, மாநில தகவல் ஆணையர் பிரியகுமார் விசாரித்தபோது, பணி ஆணைக்கான நகல்கள் வழங்கப்பட்டாலும், பூங்காக்கள் தொடர்பான ஒப்பந்த நகல்கள் இன்னும் வழங்கப்படவில்லை என, மனுதாரர் தெரிவித்தார்.
பொதுத் தகவல் அலுவலர் சார்பில், ஆவடி மாநகராட்சி உதவி பொறியாளர் நிவேதிதா ஆஜரானார். ஆனால், அதிகாரப்பூர்வ அங்கீகாரக் கடிதம், வழக்கு தொடர்பான கோப்புகள் அல்லது ஆவணங்கள் எதையும் சமர்ப்பிக்கவில்லை.
மேலும், எந்த வழக்கிற்காக ஆஜராகியுள்ளோம் என்ற அடிப்படை தகவல்கூட தெரியாமல் வந்திருந்தது, ஆணையத்தின் கவனத்திற்கு வந்தது.
இதனால் அதிருப்தி அடைந்த தகவல் ஆணையம், உரிய தயாரிப்பின்றி ஆஜராகி, ஆணையத்தின் நேரத்தை வீணடித்ததாகக்கூறி, மாநகராட்சி நிர்வாகத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தது.
விசாரணை முடிவில், ஆவடி மாநகராட்சி கமிஷனரையே, இவ்வழக்கின் பொது தகவல் அலுவலராக நியமித்து, மனுதாரர் கோரிய பூங்கா ஒப்பந்த நகல்களை கட்டணமின்றி சான்றொப்பமிட்டு, விரைவு தபாலில் அனுப்ப உத்தரவிட்டது.
மேலும், அதற்கான முழு அறிக்கையுடன், மாநகராட்சி கமிஷனர், வரும் 12-ம் தேதி தகவல் ஆணையத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.