ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில்... காத்திருப்பு! முழு உடல் பரிசோதனைக்கு 3 மாதங்களாகிறது; பிற இடங்களிலும் வசதிகளை ஏற்படுத்துமா அரசு?
- நமது நிருபர் -
ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள, மூன்று மாதங்களுக்கு மேல் நோயாளிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், பிற மருத்துவமனைகளில் இதுபோன்ற வசதிகளை அரசு உருவாக்க, மக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில், 'அம்மா' முழு உடல் பரிசோதனை மையம், 2016ல் தொடங்கப்பட்டது.
ஏழை மக்கள் குறைந்த கட்டணத்தில் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளும் வகையில், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா இம்மையத்தை தொடங்கி வைத்தார்.
தினமும் 60 பேர்
மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து, சென்னை ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், 2018ல் முழு உடல் பரிசோதனை திட்டம் தொடங்கப்பட்டது.
ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை முழு உடல் பரிசோதனை மையத்தில், தினசரி 45 பேர் வரை பரிசோதனை செய்து கொள்கின்றனர்.
அதேநேரம், ஓமந்துாரார் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மையத்தில், 60 பேர் வரை பரிசோதனை செய்து கொள்கின்றனர். அத்துடன், வரும் மூன்று மாதங்கள் வரை முன்பதிவு முடிந்து உள்ளது. இதனால், உடல் பரிசோதனை செய்து கொள்ள மக்கள், சில மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
இவற்றை தவிர்க்க, கிண்டி பல்நோக்கு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி ஆகிய மருத்துவமனைகளிலும், அதிநவீன வசதிகளுடன் கூடிய முழு உடல் பரிசோதனை மையத்தை அரசு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, டாக்டர்கள் கூறியதாவது:
சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் முன்பதிவு கிடையாது. நேரடியாக சென்று பரிசோதனை செய்து கொள்ளலாம். அங்கு, 1,000, 2,000, 3,000 ரூபாய் என, மூன்று விதமான பரிசோதனை திட்டங்கள்தான் உள்ளன.
முன்வர வேண்டும்
அதேநேரம், ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், 4,000 ரூபாய் வரையிலான பரிசோதனை திட்டம் உள்ளது.
குறிப்பாக, ஒருவர் உடற்பயிற்சி செய்யும்போது, இதயம் எவ்வளவு நன்றாக செயல்படுகிறது என்பதை மதிப்பிட பயன்படுத்தப்படும், 'ட்ரெட்மில்' சோதனை செய்யப்படுகிறது. அத்துடன், மார்பக புற்றுநோய், மற்ற புற்றுநோய் பரிசோதனைகளும் செய்யப் படுகின்றன.
மிக குறைந்த கட்டணத்தில், நவீன உபகரணங்களில் பரிசோதனை செய்யப்படுவதால், மக்கள் அதிகளவில் ஓமந்துாரார் அரசு மருத்துவமனையை விரும்புகின்றனர். அதனால் தான் எப்போதும் கூட்டமாக இருக்கிறது.
மேலும், வெளி மாநிலத்தைச் சேர்ந்தோரும் ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் உள்ள முழு உடல் பரிசோதனை மையம் வந்து, பரிசோதனை செய்து கொள்கின்றனர்.
மக்களின் இப்பிரச்னைக்கு தீர்வு காண, சென்னையில் உள்ள மற்ற மருத்துவமனைகளிலும், இதேபோன்று முழு உடல் பரிசோதனை மையத்தை அரசு அமைக்க முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
@block_B@
'அம்மா' முழு உடல் பரிசோதனை மையத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, பரிசோதனை எண்ணிக்கைக்கு ஏற்ப, ஊக்கத்தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. ஆனால், மருத்துவமனை நிர்வாகங்கள், அரசாணையை செயல்படுத்தவில்லை. ஊக்கத் தொகை வழங்கப்பட்டால், பணியாளர்கள் இன்னும் உத்வேகத்துடன் பணியாற்றுவர் என, டாக்டர்கள் தெரிவித்தனர்.block_B
மேலும்
-
கிறிஸ்துவ போதகர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்ற சபாநாயகர், அமைச்சர் மீது தவெக அதிருப்தி
-
பினாமி பெயரில் கான்ட்ராக்ட் எடுத்த திமுக 'மாஜி'க்கள் மீது நடவடிக்கை?
-
திமுக - தவெக தான் பா.ஜ.,வின் கொள்கை எதிரிகள்: அமித் ஷா திட்டவட்டம்
-
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு குண்டாஸ்
-
வடலுார் பொறியாளர் இல்ல திருமண விழா
-
அரசு மகளிர் கலைக்கல்லுாரி: அமைச்சர் உறுதி