அதிகாலை மின் தடையால் ஆவடி மக்கள் எரிச்சல் வாரிய அலுவலகம் முற்றுகை, சாலை மறியல்

ஆவடி: அதிகாலையில் ஏற்பட்ட மின் தடையால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டதோடு, சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

ஆவடி துணை மின் நிலையத்தில் இருந்து குடியிருப்புகளுக்கு மின்சாரத்தை எடுத்து செல்லும், புதைவட மின்வடம் பழுதானதால், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, வசந்தம் நகர், ஜே.பி., எஸ்டேட், சரஸ்வதி நகர், வெற்றி நகர் உள்ளிட்ட பகுதிகளில், நேற்று அதிகாலை 2:00 மணி முதல் மின்தடை ஏற்பட்டது.

நான்கு மணி நேரத்தை கடந்து, காலை 6:00 மணி வரை மின்தடை நீடித்ததால், பொதுமக்கள், ஆவடி மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம், மின்வாரிய அதிகாரிகள் அலட்சியமாக பதிலளித்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திர மடைந்த பகுதிமக்கள், ஆவடி -- பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஜே.பி., எஸ்டேட் சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆவடி போலீசார் மறியலில் ஈடுபட்டோரிடம் சமரச பேச்சு நடத்தினர்.

தற்காலிக தீர்வாக, திருவேற்காடு துணை மின் நிலையத்தில் இருந்து, மின்சாரம் வினியோகிக்கப்பட்டதால், அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில், 30 நிமிடம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பழுதான மின்வடத்தை சீரமைக்கும் பணியில், மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.

குன்றத்துார் மேத்தா நகர் குன்றத்துார் நகராட்சியில் உள்ள மேத்தா நகரில், ஒரு வாரத்திற்கும் மேலாக பகல் மற்றும் இரவு நேரங்களில், அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருவதாக, அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இப்பகுதியில் தாலுகா அலுவலகம், சார் - பதிவாளர் அலுவலகம், வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளதால், அரசு சேவைகளும் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'இரவு நேரத்தில் மின்தடை குறித்து தகவல் பெற, குன்றத்துார் மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டால், யாரும் போன் எடுப்பதில்லை. தொடர்ச்சியான மின் தடையால், ஒரு வாரமாக இரவில் துாங்க முடியாமல் தவித்து வருகிறோம்' என்றனர்.

பெருங்குடி பெருங்குடி மண்டலம், டெலிபோன் நகர் 17வது குறுக்குத் தெரு மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில், நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் வராததால், கடுமையான புழுக்கம் மற்றும் கொசுத்தொல்லையால் அவதிப்பட்ட பகுதி மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி தெருவில் தஞ்சமடைந்தனர்.

Advertisement