பணிப்பெண்ணை சீண்டிய 55 வயது நபருக்கு 'காப்பு'

கோடம்பாக்கம்: கட்டுமான பணியிடத்தில், சுத்தம் செய்யும் பணிக்கு அழைத்து, பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 55 வயது நபரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.

கோடம்பாக்கம் பகுதியில் வசிக்கும் 33 வயது பெண், பூ வியாபாரம் செய்கிறார். நேற்று முன்தினம் காலை, தன் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி, வீட்டில் தனியாக இருந்தார்.

அப்போது, அவரது வீட்டிற்கு வந்த 55 வயது நபர், தான் புதிதாக கட்டி வரும் கட்டுமான பணியிடத்தை சுத்தம் செய்து தரும்படி கேட்டு, அவரை உடன் அழைத்து சென்றார்.

கட்டுமான பணியிடத்தில் வேலை செய்த பெண்ணுக்கு, 55 வயது நபர், திடீரென பாலியல் தொல்லை கொடுத்து, தகாத உறவுக்கு அழைத்துள்ளார்.

அப்பெண் அங்கிருந்து தப்பி, கோடம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து, சம்பவத்தில் ஈடுபட்ட சூளைமேட்டைச் சேர்ந்த சந்திரமவுலி, 55, என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement