செய்திகள் சில வரிகளில்

மின் உற்பத்தி திடீர் நிறுத்தம்

திருவள்ளூர் மாவட்டம் வல்லுாரில் தேசிய அனல் மின் கழகம், தமிழக மின் வாரியத்துடன் இணைந்து, வல்லுார் அனல் மின் நிலையத்தை அமைத்துள்ளது. அங்கு தலா, 500 மெகா வாட் திறன் உடைய மூன்று அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதன் இரண்டாவது அலகில் ஆண்டு பராமரிப்பு பணிக்காக, நேற்று முன்தினம் இரவு, 11:55 மணி முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. ஜூலை, 23ல் மீண்டும் மின் உற்பத்தி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

வக்கீல்கள் போராட்டம்

குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜவிக்னேஷ்; வழக்கறிஞர். இவர், ஆலந்துார் நீதிமன்றத்தில், வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வரும் இரண்டு பேரை சரணடையச் செய்துள்ளார்.

அப்போது அவர்களிடம், ராஜவிக்னேஷ் குறித்து, பெரும்பாக்கம் காவல் நிலைய எஸ்.ஐ., சுகுமார் அவமரியாதை செய்துள்ளார். இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆலந்துார் நீதிமன்ற வழக்கறிஞர்கள் நேற்று, நீதிமன்றம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டி.ஜி.பி., ஆபீஸ் முன் போராட்டம்

கண்ணகி நகரில், 2003ல் நடந்த கொலை வழக்கில், எட்டு பேரை கைது செய்ய வேண்டும் என, இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில், டி.ஜி.பி., அலுவலகம் முன், நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போலீசார் நான்கு பேரையும், மெரினா காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.

Advertisement