என்.ஐ.டி.,களில் சேர பழங்குடியின மாணவர்கள் ஐந்து பேர் தேர்வு

2

சென்னை: 'ஜோசா' எனும் கூட்டு இட ஒதுக்கீட்டு வாரியத் தேர்வு முடிவுகள், நேற்று முன்தினம் வெளியாகின. அதில், தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளிகளில் படித்த, ஐந்து பழங்குடியின மாணவர்கள் உட்பட ஆறு பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:

தமிழகத்தில், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் 98; பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 36 மேல்நிலைப் பள்ளிகள் இயங்குகின்றன.

இவற்றில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, காலாண்டு, அரையாண்டு தேர்வு விடுமுறைகளில், நீட், ஜே.இ.இ., கியூட், கிளாட், சிபெட், 'நிப்ட்' உட்பட 19 வகையான தேசிய உயர்கல்வி நுழைவுத் தேர்வுகளுக்கு, கடலுார், சேலம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் சிறப்பு முகாம் வாயிலாக பயிற்சி அளிக்கப்படுகிறது. மாதிரித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

தற்போது, ஜே.இ.இ., மேம்பட்ட தேர்வுகளின் முதல்நிலைத் தேர்வு கலந்தாய்வில் பங்கேற்றவர்களில், ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த ஒருவர், பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த ஐந்து பேர், பல்வேறு என்.ஐ.டி., எனப்படும் தேசிய தொழில்நுட்ப பயிற்சி மையங்களுக்கு தேர்வாகி உள்ளனர்.

நாமக்கல்லைச் சேர்ந்த பரத், திருச்சியைச் சேர்ந்த சிவகாந்த், சேலத்தைச் சேர்ந்த தர்மஸ்ரீ, திருவண்ணாமலையைச் சேர்ந்த திவாகர், பிரசாந்த், மதுரையைச் சேர்ந்த நிரஞ்சனா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இது தவிர, 'சிப்பெட்' எனும் பெட்ரோ கெமிக்கல், பிளாஸ்டிக் தொழில்நுட்ப கல்லுாரிகளுக்கான தேர்வில், 18 பேர் தேர்வாகி உள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement