பருத்தி பூமியில் பாலிெயஸ்டர் ராஜ்ஜியம்!
- அதிதி குர்கர் -
சில வாரங்களுக்கு முன், வாரணாசியில் உள்ள ஒரு துரித டெலிவரி நிறுவனத்தில் கூடிய 150 பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.அவர்கள் கேட்டதெல்லாம் இதுதான்...
வெயில் சுட்டெரிக்கும் மதியம் 12:00 முதல் மாலை 4:00 மணி வரை கட்டாய வேலையை ரத்து செய்ய வேண்டும்; குடிநீர் வசதியுடன் கூடிய நிழலான காத்திருப்பு பகுதி அமைத்து தர வேண்டும்.
இதோடு சேர்த்து அவர்கள் வைத்த இன்னொரு முக்கிய கோரிக்கை, 'கோடை காலத்தில் பருத்தி சீருடைகள் வேண்டும்!'
ஆம், உலகிலேயே மிக அதிக அளவில் பருத்தி விளையும் நம் நாட்டில், கொளுத்தும் கோடையிலும் பணியாளர்கள் பாலிெயஸ்டர் துணிகளில் சீருடை அணிய நிர்ப்பந்திக்கப் படுகின்றனர்.
இது வெறும் சீருடை பற்றிய விவகாரம் அல்ல. நம் நாட்டின் தொழிலாளர் கொள்கை, ஜவுளி தொழில் ஊக்கத்திட்டங்கள் மற்றும் காலநிலை ஆகியவை ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்பதை பற்றிய விஷயம் இது.
உண்மையில் பாலிெயஸ்டர் துணி, உடலில் உருவாகும் வியர்வையை வெளியேற்றாமல் தடுத்து நிறுத்துகிறது. உடலின் இயற்கையான குளிரூட்டும் செயல்பாட்டை குறைக்கிறது. மேலும், சூரிய வெப்பத்தை பருத்தியைவிட அதிகமாக உறிஞ்சுகிறது.
அதிகரிக்கும் வெப்பம் வெப்ப அறிவியல் ஆய்வுகளின்படி, வெள்ளை நிற பருத்தி துணியுடன் ஒப்பிடும்போது, சிவப்பு நிற பாலிெயஸ்டர் துணி மூன்று மடங்கு அதிக சூரிய வெப்பத்தை உறிஞ்சுகிறது. இதன் விளைவாக இதய துடிப்பு அதிகரிக்கிறது; உடல் வெப்பம் உயர்கிறது.
இருந்தாலும், டெலிவரி ஊழியர்களுக்கு அளிக்கப்படுவது என்னவோ பாலிெயஸ்டரால் ஆன சீருடைகள்தாம். இந்தியாவின் வெப்பநிலை ஏற்கனவே அபாயகரமான கட்டத்தை அடைந்து விட்டது.
கடந்த 2024ம் ஆண்டில் மட்டும் கடும் வெப்பம் காரணமாக, இந்தியாவில் 24,700 கோடி மனித வேலை நேரங்கள் இழக்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு 18.60 லட்சம் கோடி ரூபாய். இந்த இழப்பின் பெரும்பகுதி விவசாயம், கட்டுமானம் மற்றும் திறந்தவெளி உடல் உழைப்பு துறைகளில் ஏற்பட்டது.
பாலிெயஸ்டர் ஆதிக்கம் இது தொடர்பாக, சென்னையில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவக் கல்லுாரியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், பல கவலை அளிக்கும் உண்மைகள் வெளி வந்துள்ளன.
சிறிதளவு நீரிழப்புக்குள்ளான தொழிலாளர்களுக்குகூட உற்பத்தி திறன் குறைவதற்கான வாய்ப்பு 11 மடங்கு அதிகமாக இருந்தது. இத்தகைய சூழலில், அவர்களுக்கான சீருடைகளிலும் கவனம் செலுத்தப்படாமல் உள்ளது.
நம் நாட்டின் ஜவுளி சந்தையில் பாலிெயஸ்டரின் ஆதிக்கம் வேகமாக உயர்ந்து வருகிறது. தற்போது நாட்டின் மொத்த ஜவுளி சந்தை மதிப்பில் 62 சதவீதத்தை செயற்கை இழை துணிகள் பிடித்துள்ளன. இதற்கு அரசின் கொள்கைகளும் காரணமாக உள்ளன.
மத்திய அரசின் 10,683 கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தி சார் ஊக்குவிப்பு திட்டம், செயற்கை இழை ஆடைகள் தயாரிப்பை ஊக்குவிப்பதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதில் ஜெர்சி, சட்டை, கால் சட்டை உள்ளிட்ட பாலிெயஸ்டர் அடிப்படையிலான ஆடைகள் நேரடியாக இடம்பெற்றுள்ளன.
இதில் தான் மிகப் பெரிய முரண்பாடு இருக்கிறது. உலகின் மிகப் பெரிய பருத்தி உற்பத்தியாளரான இந்தியா, பெட்ரோலிய பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் செயற்கை இழைகளுக்கே அதிக ஊக்கத்தொகை வழங்குகிறது.
ஆனால், உலகின் பல நாடுகள் இந்தியா கைவிட்ட பருத்தி துணிகளை மதிப்புடன் பயன்படுத்துகின்றன.
இலகுரக பருத்தி அமெரிக்காவில் ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் நடைபெறும் 'தேசிய பருத்தி ஆடை தின' நிகழ்ச்சியில், அந்நாட்டு பார்லிமென்ட் உறுப்பினர்கள் இந்திய வேர்களை கொண்ட இலகுரக பருத்தி ஆடைகளை அணிகின்றனர்.
ஒரு காலத்தில் தமிழக கிராமங்களில் சாதாரண தொழிலாளர்கள் அணிந்த 'மெட்ராஸ் காட்டன்' துணி இப்போது அமெரிக்காவின் உயர்தர ஆடை சந்தையில் பிரீமியம் தயாரிப்பாக விற்கப்படுகிறது.
உலக புகழ்பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் வீரர்கள் பயன்படுத்தும் அதிகாரப்பூர்வ துண்டுகூட, குஜராத்தின் வாபியில் 100 சதவீத பருத்தியில் தயாரிக்கப்படுகிறது. இப்படி உலகமே இந்திய பருத்தியை விரும்புகிறது. ஆனால், இந்திய தொழிலாளி பாலிெயஸ்டரை அணிய நிர்ப்பந்திக்கப்படுகிறார்.
இதற்கு பின்னால் பொருளாதார காரணமும் இருக்கிறது. இந்தியாவில் 1 கிலோ பாலிெயஸ்டர் நுாலின் விலை 190 ரூபாய். அதே நேரம், பருத்தி நுாலின் விலை 300 ரூபாயை தொடுகிறது.
எனவே, செலவை குறைக்க விரும்பும் நிறுவனங்கள் மலிவான பாலிெயஸ்டரையே தேர்வு செய்கின்றன.
அன்னிய மோகம் இதற்கு மேலாக, காலனித்துவ மனநிலையின் தாக்கமும் இருக்கிறது. இந்தியாவின் பாரம்பரிய உடை கலாசாரம் வெப்பமான காலநிலைக்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டது.
வேட்டி, அங்க வஸ்திரம், தளர்வான பருத்தி ஆடைகள் ஆகியவை உடலுக்கு காற்றோட்டத்தை வழங்கின.
ஆனால், ஆங்கிலேயர் ஆட்சிக்கு பிறகு சட்டை, கோட், முழுக்கால்சட்டை போன்ற மேற்கத்திய உடைகள் சமூக அந்தஸ்தின் அடையாளமாக மாறின. அந்த மனநிலை தற்போதுவரை தொடர்கிறது.
ஆனால், இதற்கு மாறாக பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, மலேஷியா, பூடான் மற்றும் வளைகுடா நாடுகள் தங்களது காலநிலைக்கு ஏற்ற பாரம்பரிய ஆடைகளையே அரசு மற்றும் பொதுத்துறைகளில் ஊக்குவிக்கின்றன.
பூடானில் அரசு ஊழியர்களும் மாணவர்களும் பாரம்பரிய உடைகளை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மலேஷியாவில் அரசு ஊழியர்கள் வாரத்தின் குறிப்பிட்ட நாளில் 'பாட்டிக்' ஆடைகளை அணிய வேண்டும்.
சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் வெள்ளை நிற தளர்வான 'தோப்' ஆடை இப்போதும் அனைத்து நிலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
ஆனால், இந்தியாவில் மட்டும் இதற்கு நேர்மாறான நிலை காணப்படுகிறது.
தெளிவில்லை தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்களில் சீருடை துணி குறித்து எந்த தெளிவான விதிமுறையும் இல்லை. வெப்ப அபாயம் குறித்தும் போதிய கவனம் இல்லை.
இருந்தாலும், ஒரு சில நிறுவனங்கள் மட்டும் வெயிலுக்கு தற்காலிக தீர்வுகளை முயற்சித்து வருகின்றன. குளிரூட்டும் உடைகள், சன் ஸ்கிரீன் ஜாக்கெட்டுகள், ஓய்வு மையங்கள், குளுக்கோஸ் பாக்கெட்டுகள் போன்றவை வழங்கப்படுகின்றன.
ஆனால், இவை அனைத்தும் அடிப்படை பிரச்னையை தவிர்க்கும் முயற்சிகளே தவிர முழு தீர்வு அல்ல.
முழு தீர்வு வேண்டும் என்றால், காலநிலைக்கு ஏற்ற பருத்தி அல்லது இயற்கை இழை சீருடைகளை தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும்.
ஜவுளி ஊக்கத்திட்டங்களில் பருத்திக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்.
உலகமே உயரும் வெப்பத்துடன் போராடி கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், இந்தியா தன் தொழிலாளர்களை எந்த துணியில் ஆடை அணிய வைக்கிறது என்பதை இனியும் நாம் எளிதாக கடந்து செல்ல முடியாது.
மேலும்
-
லஞ்சம் கேட்டதால் பறிபோனது ரூ.3.3 லட்சம் கோடி முதலீடு; திமுக ஆட்சி மீது அமைச்சர் கீர்த்தனா திடுக்!
-
திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
-
பிலிப்பைன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச்சூடு; மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு
-
தண்ணீர் பாட்டில் கொடுத்தால் வீசி எறிவார்கள்; சட்டசபையில் சிரிப்பலை
-
சொல்கிறார்கள் –––––––––– சேர்ந்து வாழாவிட்டாலும் சிறந்த பெற்றோராக இருக்கணும்!
-
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு