விவசாயிகள் சங்கம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை ஓட்டுனர்களுக்கு நல வாரியம் நல கூட்டமைப்பு வலியுறுத்தல்
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி ரத்ததான முகாம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. இதில், பங்கேற்ற மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுதுறை அமைச்சர் விக்னேஷிடம், நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம் சார்பில், விவசாய கடன் தள்ளுபடி குறித்து மனுவை வழங்கினார்கள்.
மனுவில், 'தமிழக விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான, விவசாய கடன் தள்ளுபடி குறித்து தேர்தல் வாக்குறுதியில், சிறு குறு விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட கடன் முழுவதையும், பெரு விவசாயிகளுக்கு, 50 சதவீதம் கடன் தள்ளுபடி செய்யப்படும்,' என, தமிழக முதல்வர் விஜய் தெரிவித்திருந்தார்.
ஆனால் தற்போது அறிவித்துள்ள கடன் தள்ளுபடி விவசாயிகள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதை மறுபரிசீலனை செய்து வாக்குறுதி அளித்தது போல, விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய விரைவில் உத்தரவிட வேண்டும்.
விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான பனை மற்றும் தென்னையில் இருந்து பனம் பால் மற்றும் தென்னங்கள் இறக்கி விவசாயிகள் விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும். இதனால், விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்படும். விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்திட மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். மேலும், பால் கொள்முதலை ஊக்குவிக்க, கொள்முதல் விலையை லிட்டருக்கு, 50 ரூபாயாக நிர்ணயம் செய்ய வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது.
உடுமலை: வெளி மாநிலங்கள் செல்லும் ஓட்டுனர்களுக்கு, தமிழக அரசு பாதுகாப்பு அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என உடுமலையில் இந்திய கனரக வாகன ஓட்டுனர்கள் நல கூட்டமைப்பு மாநில செயலாளர் தெரிவித்தார்.
உடுமலையில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இந்திய கனரக வாகன ஓட்டுனர்கள் நல கூட்டமைப்பு சார்பில் இலவச பொது மற்றும் கண் பரிசோதனை முகாம் நடந்தது. திருப்பூர் மாவட்ட செயலாளர் செல்வகனி தலைமை வகித்தார்.
இந்திய கனரக வாகன ஓட்டுனர்கள் நல கூட்டமைப்பு மாநில செயலாளர் அசோக் குமார் முகாமை துவக்கிவைத்து, பேசியதாவது : தமிழகத்தில் தற்போது ஓட்டுனர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. நலவாரியம் அமைத்து சாலை பாதுகாப்பு குழுவில் ஓட்டுநர்களை இணைக்க வேண்டும். வாகன ஓட்டுனர்களுக்கு தமிழக அரசு சார்பில் இலவச இன்சூரன்ஸ் விபத்து காப்பீடு வழங்க வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட வாகன ஓட்டுனர்களுக்கு, ஓய்வூதியம் அளிக்க வேண்டும். வட மாநிலங்களுக்குச் செல்லும் வாகன ஓட்டுனர்களுக்கு, உரிய பாதுகாப்பு அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றார்.