மஞ்சள் கார்டுக்கான உரிமை தொகை கோப்பு.... திரும்பியது: பட்ஜெட்டில் நிதி இல்லாததால் புது சிக்கல்
புதுச்சேரி: மஞ்சள் இல்லத்தரசிகளுக்கான 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்குவதற்கான கோப்பு நிதி இல்லாத சூழ்நிலையில் மீண்டும் திரும்பியுள்ளது.
கடந்த புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவே, என்.ஆர்.காங்., - பா.ஜ.க., கூட்டணி அரசு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை வேகப்படுத்தியது. குறிப்பாக மகளிர் ஓட்டுகளை கவரும் வகையில், சிவப்பு ரேஷன் கார்டு வைத்துள்ள மகளிருக்கான உரிமைத் தொகை அதிரடியாக 1,000 இருந்து 2,500 ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதே வேளையில், மஞ்சள் ரேஷன் கார்டு வைத்துள்ள இல்லத்தரசிகளுக்கும் ரூ. 1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என, முதல்வர் ரங்கசாமி சட்டசபையில் அறிவித்திருந்தார்.
கடந்த ஆட்சியின் இறுதிவரை இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை. மீண்டும் கூட்டணி அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதும், தனது வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக இத்திட்டத்திற்கான கோப்பினை முதல்வர் ரங்கசாமி நிதித்துறைக்கு அனுப்பி வைத்தார்.
முட்டுக்கட்டை ஏன்?:
நிதித்துறை அதிகாரிகள் இந்த கோப்பினை பரிசீலித்த பின், போதிய நிதி ஆதாரம் இல்லாததைச் சுட்டிக்காட்டி மீண்டும் முதல்வருக்கே தற்போது திருப்பி அனுப்பியுள்ளனர். முதல்வரை நேரில் சந்தித்த அதிகாரிகள் இதற்கான நிதி நெருக்கடி குறித்து விளக்கமளித்துள்ளனர்.
புதுச்சேரியில் வேறு எந்த அரசு நலத்திட்ட உதவிகளையும் பெறாத, 1 லட்சம் மஞ்சள் ரேஷன் கார்டு இல்லத்தரசிகள் இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளாக கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மாதம் 1,000 வீதம் வழங்கினால், மாதத்திற்கு 10 கோடி என, ஆண்டிற்கு 120 கோடி ரூபாய் கூடுதல் நிதி தேவைப்படும். இத்திட்டத்தை மகளிர் மேம்பாட்டுத் துறை மூலமாகவே செயல்படுத்த வேண்டும். ஏற்கனவே சிவப்பு கார்டுதாரர்களுக்கான தொகை உயர்வு உள்ளிட்ட திட்டங்களால், அத்துறையின் பட்ஜெட் 220 கோடியாக அதிகரித்துள்ளது. இப்போது மஞ்சள் கார்டுதாரர்களின் திட்டத்தையும் சேர்த்தால், அத்துறையின் ஆண்டுச் செலவு ரூ.340 கோடியாக உயரும். ஆனால், தற்போதைய பட்ஜெட்டில் அவ்வளவு தொகை இல்லை என்பதே அதிகாரிகளின் வாதம்.
தற்போதைய நிதி நெருக்கடியை சமாளிக்க அதிகாரிகள் தரப்பில் இரண்டு முக்கிய யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. முதலாவது ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கெனத் தனியாக நிதி ஒதுக்கீடு செய்து, அதன்பின் முழுமையாகச் செயல்படுத்தலாம். இரண்டாவது, வறுமைக்கோட்டுப் பிரிவினருக்கு முன்னுரிமை. முதற்கட்டமாக மஞ்சள் கார்டு வைத்திருப்பவர்களில் மிகவும் வறிய நிலையில் உள்ள குடும்பங்களுக்கு மட்டும் இத்திட்டத்தை உடனடியாகத் தொடங்கலாம். இதற்கு மாதத்திற்கு ரூ.5 கோடி மட்டுமே செலவாகும் என்பதால், தற்காலிகமாக இந்த மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுக்கலாம் என்று யோசனை முன் வைக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டம் என்ன..:
அதிகாரிகள் கோப்பைத் திருப்பி அனுப்பிய போதிலும், தகுதி வாய்ந்த அனைத்து மஞ்சள் கார்டு இல்லத்தரசிகளுக்கும் ரூ.1,000 வழியே தீர வேண்டும் என்பதில் முதல்வர் ரங்கசாமி உறுதியாக இருக்கின்றார். இதன் காரணமாக, மாற்றுத் திட்டங்கள் மற்றும் நிதி திரட்டும் வழிகள் குறித்து தீவிர ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் இக்கோப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, மீண்டும் இறுதி ஒப்புதலுக்காக நிதித்துறைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதனால், புதுச்சேரி இல்லத்தரசிகளின் ரூ.1,000 கனவு விரைவில் நனவாகுமா என்பது இன்னும் சில வாரங்களில் தெரிந்துவிடும்.