தேர்தல் நிதியில் பாதி பணம் 'லபக்'; உண்மை கண்டறியும் குழுவிடம் காங்., நிர்வாகிகள் புகார்

2

- நமது நிருபர் -

'தேர்தல் நிதியை செலவழிக்காமல் பதுக்கியதும், தேர்தல் பணிக்கு கட்சியினரை வேட்பாளர்கள் அழைக்காததுமே, தோல்விக்கான காரணம்' என, உண்மை கண்டறியும் குழுவிடம், காங்கிரஸ் நிர்வாகிகள் குற்றம் சாட்டினர்.

சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், 28 தொகுதிகளில் போட்டியிட்டு, ஐந்து இடங்களில் மட்டுமே, காங்கிரஸ் வெற்றி பெற்றது. தோல்விக்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய, டில்லி காங்கிரஸ் மேலிடம் சார்பில், உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டது.

குழுவில் முன்னாள் எம்.பி., ஜெயகுமார், மாநில நிர்வாகிகள் சொர்ணா சேதுராமன், எஸ்.எம்.இதயதுல்லா உட்பட ஐந்து பேர் நியமிக்கப்பட்டனர். இக்குழு தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும், கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்க திட்டமிட்டது.

அனைத்து தொகுதிகளிலும் கருத்து கேட்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது. எனவே, தோல்வி அடைந்த, 23 தொகுதிகளில் மட்டுமே விசாரணை நடத்த வலியுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில், வேளச்சேரி, சோளிங்கர், கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, பென்னாகரம் உள்ளிட்ட ஆறு தொகுதிகளில், விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள, 17 தொகுதிகளில் விசாரணை நடத்தி முடித்த பின், காங்கிரசின் தோல்விக்கு காரணம் தொடர்பான அறிக்கையை, டில்லி மேலிடத்தில் ஐவர் குழு சமர்ப்பிக்க உள்ளது.

இக்குழு நடத்திய விசாரணையில், 'காங்கிரஸ் வேட்பாளர்களிடம் வழங்கிய தேர்தல் நிதியில், பாதி பணம் பதுக்கப்பட்டுள்ளது. கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை, தேர்தல் பணிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் அழைத்து செல்லவில்லை.

'ஆனால், தி.மு.க., மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து செயல்பட்டனர். தேர்தலுக்கு வழங்கிய பணத்தை செலவு செய்யாததோடு, தேர்தல் பணியில் கட்சியினரை ஒதுக்கியதால், காங்., வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர்' என்பது உட்பட, பல்வேறு கருத்துகளை காங்., கட்சியினர் தெரிவித்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement