மாநில அரசின் நிதி ஒதுக்கீடு இல்லாததால் தீயணைப்பு நிலைய கட்டுமான பணியில் சிக்கல்: சின்னமனுாரில் இடம் ஒதுக்கியும் பணி துவங்காத அவலம்

சின்னமனூர்:சின்னமனூர் தீயணைப்பு நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்ட மாநில அரசின் பங்கு நிதி ஒதுக்கீட்டை விடுவிக்காததால் கட்டுமான பணி துவங்கவில்லை.

கம்பம், உத்தமபாளையத்தில் தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. சின்னமனூரில் 2021 ல் வாடகை கட்டடத்தில் தீயணைப்பு நிலையம் செயல்படத் துவங்கியது. மற்ற ஊர்களை விட சின்னமனூருக்கு அதிகார எல்லை அதிகம்.

சின்னமனூர், சீலையம்பட்டி, வேப்பம்பட்டி, காமாட்சிபுரம் , ஓடைப்பட்டி, தென்பழநி, சீப்பாலக்கோட்டை எரசை, கன்னிசேர்வை பட்டி, அப்பி பட்டி, சுக்காங்கல்பட்டி, வெள்ளையம்மாள்புரம், முத்துலாபுரம், ஊத்துப் பட்டி, மார்க்கையன்கோட்டை, குச்சனூர், அய்யம்பட்டி, புலிகுத்தி, சிந்தலச்சேரி என பல்வேறு கிராமங்களை உள்ளடங்கிய பகுதியாக உள்ளது. மேலும் மேகமலை பகுதியில் உள்ள 7 மலைக் கிராமங்களும் அடங்கும்.

சின்னமனுார் தீயணைப்பு நிலையத்தின் முக்கியத்தத்தை கருதி மத்திய அரசின் பேரிடர் கால நிதியிலிருந்து ரூ.4.56 கோடியில் புதிய கட்டடம் கட்டவும் , தீயணைப்பு வாகனம் மற்றும் நவீன உபகரணங்கள் வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு செய்து பல ஆண்டுகளாகியும் இடத் தேர்வில் சிக்கல் இருந்தது. தற்போது இடத் தேர்வு இறுதி செய்யப்பட்டுள்ளது.

சின்னமனூரில் கண்ணம்மா கார்டனுக்கு எதிரில் உள்ள இடம், தாய் பள்ளிக்கு அருகில் உள்ள 86 சென்ட் புறம்போக்கு நிலம், பெட்ரோல் பல்க் எதிரில் உள்ள இடம் என பல இடங்களை சுட்டிக்காட்டியும், தர மறுத்து விட்டனர். கடைசியில் சின்னமனூரிலிருந்து 5 கி.மீ., துாரத்தில் வெள்ளையம்மாள் புரம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள 50 சென்ட் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சின்னமனூர் நகர் மையப் பகுதியில் கட்டினால் ரோட்டின் மேற்கு, கிழக்கு பகுதிகளுக்கு அவசர காலங்களில் உரிய நேரத்தில் செல்ல முடியும். அதை விடுத்து , தற்போது தேர்வு செய்துள்ள இடத்தில் கட்டினால் பல பகுதிகளுக்கு அவசர காலங்களில் உரிய நேரத்தில் செல்ல கால தாமதம் ஏற்படும்.

வெள்ளையம்மாள்புரம் ரோட்டில் இடம் ஒதுக்கி ஓராண்டாகிறது. இன்னமும் புதிய கட்டடம் கட்டுமான பணிகள் துவங்கவில்லை. மாநில அரசு தன் பங்கிற்குரிய நிதி ஒதுக்கீட்டை விடுவிக்காததால் கட்டட பணிகள் தாமதமாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மாநில அரசு உடனடியாக நிதி ஒதுக்கீட்டை விடுவிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement