பிரியங்கா நட்பு; ராகுல் வெறுப்பு; தமிழக எம்.பி., சோகம்

6



நமது சிறப்பு நிருபர்




காங்., லோக்சபா எம்.பி.,யும், சோனியாவின் மகளுமான பிரியங்காவிற்கு டில்லியின் லோதி எஸ்டேட் பகுதியில், அரசு பங்களா உள்ளது. இந்த பங்களாவிற்கு பக்கத்தில், தமிழக எம்.பி.,யின் அரசு பங்களா உள்ளது. பிரியங்கா வீட்டிற்கு அதிக கார்கள் வந்து விட்டால், அவை பக்கத்து வீட்டில் தான் நிறுத்தப்படுகின்றன.

இப்படி பக்கத்து வீட்டால் சில பயன்கள் இருந்தாலும், தொந்தரவும் இருக்கவே செய்கின்றன. தமிழக எம்.பி., வீட்டிற்கு வரும் காங்கிரசார், பிரியங்கா பக்கத்து வீடு தானே என, அவரை பார்க்க தடாலடியாக அவரது பங்களாவிற்கு வந்து விடுகின்றனர். பலத்த பாதுகாப்பு இருந்தாலும், 'மேடத்தை பார்க்க வேண்டும்' என, தமிழக காங்., தொண்டர்கள் வேண்டுகோள் வைக்கின்றனர்.

ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார் பிரியங்கா. 'என்னை சந்திப்பதாக இருந்தால், கட்சி அலுவலகத்திற்குத் தான் வர வேண்டும்; வீட்டிற்கு அல்ல' என, கறாராக சொல்லி விட்டார். ஆனாலும், அவர் வெளியே செல்லும் போதாவது, அவரை பார்த்து விடலாம் என்றும் சிலர் காத்து கிடப்பது வழக்கமாகி விட்டது.
பிரியங்காவை சந்திக்க, அவரது சகோதரர் ராகுல் அடிக்கடி இந்த பங்களாவிற்கு வருகிறார். இருவரும் நெடுநேரம் அரசியல் குறித்து ஆலோசனை செய்கின்றனர். அப்படியே பக்கத்து வீட்டில் வசிக்கும் மூத்த தலைவரான, எம்.பி., யையும் ராகுல் சந்தித்துவிட்டு செல்வாரா என்றால் அதுதான் இல்லை.

பக்கத்து வீட்டு பக்கமே ராகுல் தலைகாட்டுவதில்லை. இதனால், அந்த காங்., - எம்.பி.,க்கு வருத்தமோ வருத்தம். ஏற்கனவே இந்த தமிழக எம்.பி., மீது ராகுல் கோபத்தில் இருக்கிறார். நேரில் பார்த்தால் கூட இவரிடம் பேசுவதும் கிடையாது. ஆனால், பக்கத்து வீட்டுக்காரரோடு நல்ல நட்பில் இருப்பதுடன், அடிக்கடி அவரை சந்திக்கவும் செய்கிறார் பிரியங்கா.

Advertisement