அன்றே சொன்னது தினமலர்: மாநகராட்சி பணியாளர் நியமனத்தில் முறைகேடு; கோர்ட் உத்தரவால் அதிகாரிகள் கலக்கம்

20


கோவை: கடந்த 2021ல் அ.தி.மு.க. ஆட்சியில், உள்ளாட்சி துறை அமைச்சராக வேலுமணி இருந்தபோது, கோவை மாநகராட்சியில் நேரடி நியமனம் முறையில் 54 இளநிலை உதவியா ளர்கள் நியமிக்கப்பட்டனர். இதை, சென்னை ஐகோர்ட் ரத்து செய்திருக்கிறது.

2021 பிப்ரவரியில் நடந்த அந்த நியமனம் தொடர்பாக, அப்போதே, நமது நாளிதழ் கோவை பதிப்பில், 'காத்திருப்போரை கண்டுகொள்ளாமல், அடிச் சாங்க பாரு அப்பாயின்மென்ட் ஆர்டர், இரவில் வழங்கப்பட்ட பின்னணியில் இருட்டு' என்கிற தலைப்பில் விரிவாக செய்தி வெளியிடப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு பின், தீர்ப்பு கிடைத்திருக்கிறது.

அதன் விபரம்: 2021ல் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில், கோவை மாநகராட்சியில், 103 இளநிலை உதவியாளர் பணியிடம் காலியாக இருந்தது. சீனியாரிட்டியில், துப்புரவு மேற்பார்வையாளர்/ டிரைவர்/ பதிவுரு எழுத்தர் ஆகியோரில், 34 பேருக்கு இளநிலை உதவியாளர் பணியிடம் வழங்கப்பட்டது. மீதமுள்ள 69 பணியிடங்களை நேரடி நியமனம் முறையில் நியமிக்க முடிவு செய்யப்பட்டது.

அப்பணிக்கு 654 பேர் விண்ணப்பித்தனர். 2021 பிப். 8ல் நேர்காணல் நடந்தது; 440 பேர் பங்கேற்றனர்; 214 பேர் வரவில்லை. உதவி கமிஷனர்கள் கொண்ட அதிகாரிகள் குழு சான்றிதழ்களை சரிபார்த்தது. அன்றைய தினமே நியமன குழு கூட்டம் நடத்தப்பட்டது. அன்றிரவே தேர்வானோர் பட்டியல் இறுதி செய்து, 54 பேருக்கு 'அப்பாயின்மென்ட்' ஆர்டர் தயாரித்து, மறுநாள் வழங்கப்பட்டது.

அரசுக்கு அறிவுறுத்தல் சீனியாரிட்டியில் காத்திருப்போருக்கு பதவி உயர்வு வழங்கி விட்டு, மீதமுள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நியமிக்க ஊழியர்கள் கோரினர். அதை மாநகராட்சி நிர்வாகம் ஏற்கவில்லை. பதவி உயர்வு எதிர்பார்த்த ஊழியர்களில் சிலர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதில், 54 பேரின் நியமனத்தை ரத்து செய்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முறைகேடான நியமனத்துக்கு உடந்தையாக இருந்த அதிகாாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், காலியிடங்களுக்கு முறையாக தேர்வு நடத்தி, தகுதியானவர்களை நேர்மையாக நியமிக்கவும் தமிழக அரசுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

அதிகாரிகள் கலக்கம் பணி நியமனம் நடந்த காலத்தில், உதவி கமிஷனர்களாக பணிபுரிந்த முருகன், சுந்தர்ராஜன், செந்தில்குமார் ரத்தினம், ரவி, அண்ணாதுரை ஆகியோர் தலைமையிலான குழுவினரே, ஊழியர்களை தேர்வு செய்தனர். இவர்களில் சிலர், தற்போது பதவி உயர்வு பெற்று வெவ்வேறு இடங்களில் பணிபுரிகின்றனர். யாருமே கோவை மாநகராட்சியில் பணிபுரியவில்லை.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, முதல்வர் விஜய் வசம் இருக்கிறது. வெளிப்படையான, நேர்மையான நிர்வாகத்தை அவர் வலியுறுத்தி வருகிறார். அவரது கவனத்துக்கு இப்பிரச்னை கொண்டு செல்லும்போது, ஐகோர்ட் உத்தரவை செயல்படுத்த அறிவுறுத்தக் கூடும் என்பதால், அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.

Advertisement