கூவம், அடையாறு சீரமைக்க விரிவான செயல் திட்டம்; முதல்வர் விஜய் உத்தரவு

22



- நமது நிருபர் -




கழிவுநீர் பாயும் அளவுக்கு சீரழிந்துள்ள கூவம், அடையாறு ஆகிய நீர் நிலைகளில், நன்னீர் செல்லும் வகையிலான சீரமைப்பு செயல் திட்டத்தை உருவாக்க, முதல்வர் விஜய், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதற்காக ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையில் கமிட்டி அமைக்கவும் உத்தரவிட்டுள்ளதால், நீர்நிலைகளுக்கு விடியல் வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை நகரின் முக்கிய அடையாளங்களாக கூவம் மற்றும் அடையாறு ஆறுகள் உள்ளன. இந்த ஆறுகளை துாய்மைப் படுத்தவும், சுற்றுச்சூழல் ரீதியாக மீட்டெடுக்கவும், தி.மு.க., -- அ.தி.மு.க., அரசுகள் முயன்றன. குறிப்பாக, கூவம் ஆறு சீரமைப்புக்கு, 604.77 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. அதில், கூவம் ஆற்றில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, மறுகுடியமர்வு செய்யப்பட்டன.

அதேபோல், தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, கரையோரங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன. ஆனால், விதிமீறி கழிவுநீர் விடுவதை குடிநீர் வடிகால் மற்றும் வழங்கல் வாரியத்தால் தடுக்க முடியவில்லை. நீர்நிலைகளில் குப்பை போடுவதை மாநகராட்சியாலும் தடுக்க முடியவில்லை. இதனால், கூவம் ஆறு தற்போதும் துர்நாற்றம் வீசி வருகிறது. அதேபோல், அடையாறு ஆறு சீரமைப்புக்காக,17,000 கோடி ரூபாய்க்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.

முதற்கட்டமாக, 4,778.26 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் தொடங்கப்பட்டன. அப்பணிகள், சில காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டன. தற்போது நீதிமன்றம் வாயிலாக அப்பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது. இந்நிலையில், நகராட்சி நிர்வாகத்துறை குறித்த ஆய்வில், சமீபத்தில் பங்கேற்ற முதல்வர் விஜய், சென்னை மாநகரை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் வகையில், திட்டம் தயாரிக்க உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து, நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள நகரங்களை, சர்வதேச தரத்துக்கு உயர்த்த வேண்டும் என, முதல்வர் விஜய் விரும்புகிறார். குறிப்பாக, சென்னை மாநகரில் ஓடும் கூவம், அடையாறு போன்ற நீர்நிலைகளில் எப்போதும் நன்னீர் செல்ல வேண்டும். குப்பை, அசுத்தம் இல்லாத சென்னையாக மாற்ற வேண்டும் என நினைக்கிறார்.

ஏற்கனவே, தி.மு.க., அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் நீர்நிலைகள் சீரமைக்கப்பட்டு இருந்தாலும், அவை முழுமையான செயல்பாட்டுக்கு வரவில்லை.எனவே, ஓர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையில் கமிட்டி அமைத்து, கூவம், அடையாறு ஆற்றில் நன்னீர் செல்லும் வகையிலான சீரமைப்புக்கு செயல்திட்டத்தை தயாரிக்க உத் தரவிட்டுள்ளார். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. என்னென்ன பணிகளை, எப்படி செய்தால் கூவம், அடையாறு ஆற்றை சீரமைக்க முடியும்.

எத்தனை இடங்களில் சட்டவிரோதமாக கழிவுநீர் நேரடியாக விடப்படுகிறது. அதில், எந்தெந்த நிறுவனங்களுக்கு தொடர்பு உள்ளது போன்ற பட்டியல் சேகரிக்கப்பட்டு, முதல்வரிடம் விரிவான செயல் திட்ட அறிக்கை, ஓரிரு மாதங்களில் சமர்ப்பிக்கப்படும். முதல்வர் விஜய், நேரடியாக சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்வதால், கூவம், அடையாறு உள்ளிட்ட மாநகரில் உள்ள நீர்நிலைகளுக்கு விரைவில் விடிவு காலம் வரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement