போலீஸ் குடியிருப்பில் நாய் தொல்லை அதிகரிப்பு

ஆயிரம்விளக்கு: ஆயிரம்விளக்கில் உள்ள கொச்சிஹவுஸ் போலீஸ் குடியிருப்பில், தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால், பகுதிவாசிகள் பதற்றத்தில் உள்ளனர்.

ஆயிரம்விளக்கு, கொச்சின் ஹவுஸ் போலீஸ் குடியிருப்பில், 600க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இங்கு வளர்ப்பு பிராணிகளை வளர்க்க அனுமதி கிடையாது.

ஆனால், சுற்றுவட்டார பகுதியில் உள்ள, 30க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் குடியிருப்பு வளாகத்தை சுற்றி வருகிறது. இங்கு நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களின் இருக்கைகளை கடித்து சேதப்படுத்தி வருகின்றன. மேலும், வளாகத்தில் விளையாடும் சிறுவர் – சிறுமியரை துரத்தி துரத்தி கடிக்கின்றன.

சில வாரங்களுக்கு முன், ஒரு சிறுவனை தெருநாய் ஒன்று கடித்துள்ளது. இருப்பினும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர்.

எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, போலீஸ் குடியிருப்பு மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement