வவ்வால்களால் மாங்காய்கள் சேதம்

ஆண்டிபட்டி:வைகை அணையில் இரவில் கூட்டமாக வரும் வவ்வால்கள் மாந்தோப்பில் புகுந்து காய்களை சேதப்படுத்துவதால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது.

வைகை அணை வலது, இடது கரைகளில் 150க்கும் மேற்பட்ட மா மரங்கள் உள்ளன. காசா, கல்லாமை, பங்கனபள்ளி, செந்தூரம், மல்கோவா வகை மரங்களில் தற்போது காய்கள் அதிகம் உள்ளன. மா மரங்களில் காய்கள் பறிக்கும் குத்தகை 3 ஆண்டுக்கு ஒருமுறை நீர்வளத் துறை மூலம் ஏலம் விடப்படும். குத்தகையை ஏலத்தில் எடுக்கும் விவசாயிகள் மரங்களை பராமரித்து காய்களை பறித்து விற்பனை செய்கின்றனர். நடப்பாண்டில் வவ்வால்களால் மா மரங்களில் காய்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.

விவசாயி சித்ரா கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் ஆகஸ்ட் வரை மாமரங்களில் காய்ப்புக்கான காலமாகும். நடப்பு ஆண்டில் மரங்களில் காய்ப்பு அதிகம் உள்ளது. இரவில் கூட்டமாக வரும் ஆயிரக்கணக்கான வவ்வால்கள் மாந்தோப்புகளில் புகுந்து காய்களை சேதப்படுத்துகிறது. தினமும் 300 முதல் 500 கிலோ மாங்காய்கள் சேதம் அடைகிறது. நன்கு விளைந்த மாங்காய்களை கடித்து சேதப்படுத்துகிறது. மரங்களில் கூட்டமாக வந்து செல்வதால் மாங்காய்கள் உதிர்ந்து சேதம் அடைகிறது. வவ்வால்களை கட்டுப்படுத்த முடியவில்லை. பகலில் அருகில் உள்ள வனவியல் கல்லூரி வளாகத்திற்கு செல்லும் வவ்வால்கள் இரவில் மாங்காய்களை சேதப்படுத்துகின்றன. வவ்வால்களால் தினமும் ரூ.2000 முதல் ரூ.3000 வரை இழப்பு ஏற்படுகிறது. வவ்வால்களை கட்டுப்படுத்த வனத்துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்க வேண்டும் என்றார்.

Advertisement