நீலகிரியில் நலிந்த நிலையில் உள்ள 10 பேரூராட்சிகளில்... மாற்றம் வருமா?தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டங்கள் 'மிஸ்சிங்'

குன்னுார்: 'நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல பேரூராட்சிகளை மறுவரையறை செய்து மீண்டும் சிற்றுாராட்சிகளாக மாற்ற வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் மக்களின் வாழ்க்கை முறையை ஆய்வு செய்து, 35 ஊராட்சிகளை 96 சிற்றுாராட்சிகளாக பிரித்து சமீபத்தில் அரசாணை வெளியிட்டது. ஆனால், கடந்த, 50 ஆண்டுகளுக்கும் மேலாக,10 பேரூராட்சிகள் நலிவடைந்த நிலையில் உள்ளதாக பல முறை அரசுக்கு தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

மாவட்டத்தில், பழங்குடியினர், ஏழை,எளிய தொழிலாளர்கள் அதிகம் உள்ள சிற்றுார்களுக்கு, பேரூராட்சிக்கான தகுதி இல்லாத போதும், கடந்த காலங்களில் இங்குள்ள பெரும் தேயிலை தோட்டங்களின் வருவாயை அடிப்படையாக கொண்டு தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதனால், நகர்ப்புற உள்ளாட்சிகளின் அதிகப்படியான வரிவிதிப்பு, ஏழை கூலி தொழிலாளர்கள் மீது சுமத்தப்படுகிறது.

மத்திய அரசின் திட்டங்கள் 'மிஸ்சிங்' பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டங்கள், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம், ஜல் ஜீவன், ஜல் சக்தி போன்ற திட்டங்கள் பேரூராட்சியில் உள்ள கிராமங்களுக்கு கிடைப்பதில்லை. சில பேரூராட்சி அலுவலர்கள் தங்களின் பணி பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தவறான தரவுகளை அரசுக்கு அளித்து இந்த சிற்றூர்களை பேரூராட்சிகளாக தக்கவைத்து கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக, உள்ளாட்சி அமைப்புகள் மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் மனோகரன் கூறுகையில்,''சமவெளி பகுதிகளில் அதிக தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் உள்ளதால், பல கிராமங்களை உள்ள பகுதிகள் பேரூராட்சிகளாக இருப்பது ஏற்புடையது. ஆனால், சிறு-,குறு தேயிலை விவசாயிகள் மற்றும் கூலி தொழிலாளர்கள் மட்டுமே வாழும் மலை பகுதியில், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய பல கிராமங்கள் பேரூராட்சிகளாக வைத்திருப்பது சமூக அநீதி. எனவே, தற்போதைய அரசு, மக்களின் வாழ்வாதாரத்தை காக்க, பேரூராட்சிகளை மறுவரையறை செய்து, அதிக கிராமங்கள் உள்ள பகுதிகளை சிற்றுாராட்சிகளாக மாற்ற வேண்டும். இது தொடர்பாக, மாநில முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement