கால்வாய் புனரமைப்பு திட்டம் ரத்தா? திருமூர்த்தி திட்டக்குழு ஆட்சேபனை 

பொள்ளாச்சி: பி.ஏ.பி., திட்டத்தில், 4,500 கோடி கால்வாய் புனரமைப்பு திட்டம் ரத்து செய்து, குழாய் வழி பாசன திட்டம் செயல்படுத்துவதாக அமைச்சர் தெரிவித்த கருத்துக்கு திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் பரமசிவம், அமைச்சர் கருத்துக்கு ஆட்சேபனை தெரிவித்து, நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்துக்கு மனு அனுப்பியுள்ளார். மனுவில் கூறியிருப்பதாவது:

பி.ஏ.பி., திட்டத்தில், காண்டூர் கால்வாயில் விட்டுப்போன பகுதிகள், பிரதான கால்வாய் முழுவதும், கிளை, பகிர்மான கால்வாய்கள், ஷட்டர்கள் பழுதடைந்துள்ளன. நீர் விரயமாகுவதால் கடைமடை வரை தண்ணீர் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.

இதனால், விவசாயிகள் கோரிக்கை ஏற்று, கால்வாய் புனரமைப்புக்கு, 4,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்ட அறிக்கை தயார் செய்து, அரசின் பரிசீலனையில் உள்ளது. 

இந்நிலையில், அமைச்சர் அருண்ராஜ், அந்த திட்ட அறிக்கை செயல்படுத்தப்படாது; குழாய் பாசனம் செயல்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். பி.ஏ.பி.,யில், திட்டக்குழு, ஒன்பது பகிர்மான குழு, 134 பாசன சங்கங்கள் உள்ளன. ஒரு சில விவசாயிகள் பேச்சை கேட்டு அமைச்சர் அறிக்கை வெளியிட்டது வேதனை அளிக்கிறது.

குழாய் வழி பாசனத் திட்டம்  வேறு ஏதாவது பாசன திட்டத்தில் செயல்படுவதை பார்வையிட்டு உள்ளாரா, அதில் இருக்கும் நன்மை, தீமைகளை அங்குள்ள விவசாயிகளிடம் இருந்து அறிந்துள்ளாரா என தெரியவில்லை. விவசாயிகள் கருத்தை கேட்காமல் அமைச்சர் அறிவித்தது வியப்பாக உள்ளது.  உரிய நடவடிக்கை எடுத்து, 4,500 கோடி ரூபாய் மதிப்பீட்டு திட்ட அறிக்கையை அமல்படுத்த வேண்டும்.

இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement