பெண் எஸ்.ஐ., மிரட்டுவதாக பெண்கள் முற்றுகை

மதுரை: மதுரை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமையில் நடந்தது. நேர்முக உதவியாளர் பார்த்திபன், ஆதிதிராவிடர் நல அலுவலர் செல்வன், மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் சுவாமிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

ஜாங்கிட்நகர் பஞ்சு என்பவர் உறவினர்களுடன் வந்து, ‘பெண் எஸ்.ஐ., ஒருவர் பா.ஜ., பிரமுகருக்கு ஆதரவாக இடத்தை காலி செய்ய மிரட்டுவதாக’ கூறி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டார். சர்வேயர் காலனி 120 அடி ரோட்டில் 50க்கும் மேற்பட்ட பள்ளங்கள் இருப்பதாக கூறி சமூகஆர்வலர் சுந்தரராஜ் மனு அளித்தார்.

வலைசேரிப்பட்டி சரவணன் அளித்த மனுவில், ‛‛மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் தனியார் ஆக்கிரமிப்புகள் பல உள்ளன. பருவமழை காலம் துவங்கும் முன் அரசு ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலைகளை மீட்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் கூமாபட்டி ராஜா அளித்த மனுவில், ‛‛எனது மகன் ஜெயராஜ் மதுரை புதுார் ஐ.டி.ஐ.,யில் படித்தார். அங்கு பயிற்றுனர் ஒருவர், எனது மகனை அடித்து அசிங்கமாக பேசியதால் தற்கொலைக்கு முயற்சித்தார். மகன் மீண்டும் ஐ.டி.ஐ., படிப்பைத் தொடரவும், பயிற்றுனர் மீது நடவடிக்கை எடுக்கவும் மனு அளித்தேன். இதனை விசாரித்த இயக்குனர், பயிற்றுனருக்கு ஆதரவாக எனது மகன் படிப்பு தொடர முடியாது என்றதுடன், படிப்பைத் தொடர முடியாத அளவுக்கு வருகைப் பதிவேட்டில் சில திருத்தங்களைச் செய்து அட்மிஷன் மறுக்கிறார். கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement