குடியிருப்பு பகுதியில் மோசமான சாலையால் பொதுமக்கள் அவதி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி விநாயகா நகரில் மண் சாலையில் மழைநீர் தேங்கி சேரும் சகதியுமாக இருப்பதால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கள்ளக்குறிச்சி துருகம் ரோட்டில் உள்ள விநாயகா நகரில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்கு அனைத்து தெருக்களிலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளம் தோண்டி குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது.

இதில், குடியிருப்பு பகுதியில் உள்ள தெருக்கள் அனைத்தும் மண் சாலையாக மாறி குண்டும் குழியுமானது. இதனால் அவ்வழியாகச் செல்லும் கார்கள், பள்ளிக்கு மாணவர்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள், இரு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

இந்நிலையில் அவ்வப்போது பெய்து வரும் மழையில் விநாயகா நகரில் உள்ள தெருக்களில் மழை நீர் தேங்கி, சேரும் சகதியுமாறி மாறி விடுகிறது. சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்ககோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.

எனவே, குடியிருப்பு வாசிகளின் நலன் கருதி விநாயகா நகரில் உள்ள தெருக்களின் சாலைகளை சீரமைக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

Advertisement