நீலகிரியில் ஹவுசிங் போர்டில் குடியிருப்போருக்கு... நோட்டீஸ் வினியோகம்!அபாய கட்டடங்களை இடிக்க அரசு நடவடிக்கை
ஊட்டி: நீலகிரியில் அபாய நிலையில் உள்ள 'ஹவுசிங் போர்டு' கட்டடங்களை இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், குடியிருப்பவர்களை வெளியேற்ற 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.
ஊட்டி, குன்னுார், கூடலுார் பகுதிகளில் ஹவுசிங் போர்டு குடியிருப்பில், 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். குடியிருப்புகள் அனைத்தும் கடந்த, 1980 முதல் 1988ம் ஆண்டு கால கட்டத்தில் கட்டப்பட்டவை.
தற்போது, அதில் பல குடியிருப்புகளில் சுவர்களில் விரிசல், கான்கிரீட் பெயர்ந்து விழுதல் , மழை நீர் கசிவு மற்றும் கழிவுநீர் அடைப்பு போன்ற பிரச்னைகளால், குடியிருப்போர் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி உள்ளன.
'நோட்டீஸ்' வினியோகம் இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள, 300க்கு மேற்பட்ட வீடுகளில், 150 வீடுகள் ஏற்கனவே காலி செய்யப்பட்டுள்ளன. மேலும், 'அபாய கட்டத்தில் உள்ள மீதிமுள்ள கட்டடங்களில் வசிப்பவர்கள் காலி செய்ய வேண்டும்,' என, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஹவுசிங் போர்டு அதிகாரிகள் கூறுகையில், 'ஊட்டி, குன்னுார், கூடலுார் உள்ளிட்ட தாலுகா பகுதிகளில், 'ஊட்டியில், 214 வீடு; கூடலூரில், 84; குன்னுாரில் 28' என, 326 வீடுகள், 36 ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்டதால் கட்டடங்கள் பலவீனமடைந்துள்ளது.
புதிய கட்டடங்கள் கட்ட மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாக அரசுக்கு கருத்துரு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்களில் குடியிருந்து வருபவர்களை காலி செய்ய கூறி, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பலர் அபாயத்தை உணராமல் வெளியேற மறுக்கின்றனர். அவர்களை காலி செய்ய மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது,' என்றனர்.
குடியிருப்பு வாசிகள் கூறுகையில்,' மாவட்டம் முழுவதும், அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து, சில ஆண்டுக்கு முன்பு புனரமைக்கப்பட்டு, நல்ல நிலையில் உள்ள வீடுகளை இடிக்காமல் விட வேண்டும். ஏற்கனவே காலி செய்யப்பட்டு, அபாய நிலையில் உள்ள வீடுகளை இடித்து புதிய கட்டுமானம் கட்ட வேண்டும்,' என்றனர்.