இலவச மனைப்பட்டா கேட்டு கிராம மக்கள் உண்ணாவிரதம்

நெட்டப்பாக்கம்: இலவச மனைப்பட்டா கேட்டு, கம்பிளிகாரன்குப்பம் கிராம மக்கள் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஏம்பலம் தொகுதி கம்பிளிகாரன்குப்பம் கிராமம் காலனி பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசதித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு கடந்த 50 ஆண்டுகளாக இலவச மனைப்பட்டா வழங்கப்படவில்லை. இதனால் ஒரே வீட்டில் 3 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதால் அப்பகுதி மக்கள் பல சிரமங்களை வசித்து வருகின்றனர். அதையடுத்து அப்பகுதி மக்கள் இலவச மனைப்பட்டா கேட்டு அரசிடம் பல்வேறு கோரிக்கை மனுக்கள் வழங்கினர்.

அதன்பேரில் அரசு சார்பில் இலவச மனைப்பட்டா வழங்க அப்பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தில் அதே கிராமத்தைச் சேர்ந்த மற்ற தரப்பை சேர்ந்த மக்கள் விளையாட்டு திடல் அமைக்க ஜே.சி.பி., இயந்திரம் மூலம் சமன் செய்துள்ளனர். இதனையறிந்த கம்பிளிகாரன்குப்பம் காலனி பகுதி மக்கள் அதே பகுதியைச் சேர்ந்த அம்பேத்கர் தொண்டர் படை மாநில தலைவர் பாவடைராயன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் கம்பிளிகாரன்குப்பம் சந்திப்பு பகுதியில் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த மங்கலம் சப் இன்ஸ்பெக்டர் பெரியசாமி, வில்லியனுார் வருவாய் துறை ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அரசு கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து உண்ணாவிரதம் முடித்து வைக்கப்பட்டது. காலை 9 மணிக்கு துவங்கிய உண்ணாவிரதம் மதியம் 2 மணி வரை நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement