ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சியின் கவுகாத்தி பயணம் ரத்து!

கவுகாத்தி; ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சியின் கவுகாத்தி பயணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

கடந்த அக்டோபர் 21ம் தேதி ஜப்பான் பிரதமராக சனே தகாய்ச்சி பொறுப்பேற்றார். ஜப்பானின் வரலாற்றில் பிரதமர் பதவி வகிக்கும் முதல் பெண் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

அவரின் முதல் இந்திய பயணம் ஜூலை 1ம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஜூலை 3ம் தேதி வரை அவர் இந்தியாவில் இருக்கும் வகையில் பயணத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந் நிலையில், அவரின் அசாம் பயணம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்த விவரத்தை அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா வெளியிட்டு உள்ளார்.

நிருபர்களிடம் அவர் மேலும் கூறியதாவது;

ஜூவை 1ம் தேதி அசாமிற்கு ஜப்பான் பிரதமர் தகாய்ச்சியின் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது அந்த பயணம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் எங்களிடம் தெரிவித்து இருக்கிறது. ரத்துக்கான காரணம் எனக்கு தெரியாது

வேறு ஒரு தேதியில் அவரது பயணம் திட்டமிடப்படும் என்று வெளியுறவு அமைச்சகம் உறுதி அளித்துள்ளது. இந்தியா-ஜப்பான் உச்சி மாநாட்டிற்காக பிரதமர் மோடி மேற்கொள்ளவிருந்த பயணமும் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. இந்த விவரத்தையும் வெளியுறவு அமைச்சகம் எங்களிடம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா கூறினார்.

Advertisement