பருவமழை பெய்யாததால் விவசாயிகள் ஏமாற்றம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்யாததால், பயிர் சாகுபடிக்காக காத்திருந்த விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுப்பகுதியில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. இப்பகுதியில், தென்மேற்கு பருவமழை காலத்தில், மானாவாரியில் நிலக்கடலை, கம்பு, சோளம் உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகிறது.

வழக்கமாக, மே மாதம் இறுதியில் தென்மேற்கு பருவமழை பெய்ய துவங்கும். ஆனால், ஜூன் மாதம் இறுதியாகியும் மழை பொழிவு தீவிரமடையவில்லை. இதனால், மானாவாரி சாகுபடிக்கு காத்திருந்த விவசாயிகள், சித்திரை, வைகாசி பட்டத்தில் எவ்வித சாகுபடியிலும் ஈடுபடவில்லை.

விவசாயிகள் கூறுகையில், பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை தீவிரமடையவில்லை. மலைப்பகுதியில் மழை பெய்யாததால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கவில்லை. ஜூலை மாதத்தில் மழை பெய்தால் மட்டுமே ஆடிப்பட்டத்தில் பயிர் சாகுபடிக்கு நிலத்தை தயார்படுத்த முடியும்,’ என்றனர்.

Advertisement