இறந்தவரின் ரூ.1.15 லட்சம் உறவினரிடம் வழங்க ஏற்பாடு

மூணாறு: வீடற்று சுற்றிதிரிந்தவர் இறந்ததால் அவர் வைத்திருந்த பையில் ரூ.1.15 லட்சம் இருந்தது. அதனை உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இடுக்கி மாவட்டம் ராஜாக்காடு அருகே பனச்சிகுழி பகுதியை சேர்ந்தவர் சசி 64. இவருக்கு வீடு, குடும்பம் யாரும் இல்லாததால் நீண்ட காலமாக ராஜாக்காடு நகரில் சுற்றித்திரிந்தார்.

அங்குள்ள தேவாலயம் அருகில் உள்ள பள்ளி வரண்டாவில் இரவு பொழுதை கழிப்பது வழக்கம்.

சிறுநீரகம் பாதிப்பால் அவதியுற்ற சசிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவரை ராஜாக்காடு ஊராட்சி தலைவர் கிங்கினி ராஜேந்திரன் தலைமையில் சிலர் ராஜாக்காட்டில் தனியார் மருத்துவனையிலும், பின்னர் கோட்டயம் மருத்துவ கல்லூரியில் அனுமதித்தனர். அதன்பிறகு தொடுபுழா மாவட்ட மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட சசி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இந்நிலையில் சசி வைத்திருந்த உடமைகளை ஊராட்சி அதிகாரிகள் பரிசோதித்தபோது, ஒரு பையில் ரூ. 1,15,751 இருந்தது தெரிய வந்தது. அதனை கைப்பற்றிய அதிகாரிகள் சசியின் உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

Advertisement