'நீட்' மறுதேர்வில் ஆள்மாறாட்டம் செய்த  30 பேர் கைது! பீஹாரில் மருத்துவ மாணவர்கள் அட்டூழியம்

3

புதுடில்லி; பீஹாரில் நடந்த இளநிலை மருத்துவ படிப்புக்கான, 'நீட்' மறுதேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வெழுத முயன்றதாக, மருத்துவ கல்லுாரி மற்றும் நர்சிங் கல்லுாரி மாணவர்கள் உட்பட, 30 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆள்மாறாட்ட மோசடிக்கு எம்.பி.பி.எஸ்., படிக்கும் மாணவர்களே உறுதுணையாக இருந்தது போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

நாடு முழுதும் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்பு களுக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு, கடந்த மே 3ல் நடந்தது. மொத்தம் 22.79 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தேர்வுக்கு முன்பாகவே வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது.

விசாரணையில் இது உறுதி செய்யப்பட்டதால், மே 3ல் நடத்தப்பட்ட 'நீட்' தேர்வை தேசிய தேர்வு முகமை ரத்து செய்து, மறுதேர்வு நடத் தப்படும் என அறிவித்தது. அதன்படி நாடு முழுதும் நேற்று முன்தினம் 'நீட்' மறுதேர்வு நடந்தது.

இந்நிலையில், பீஹார் மாநிலம் லக்கிசராய் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட சில தேர்வு மையங்களில், ஆள்மாறாட்டம் செய்து தேர்வெழுத முயன்றவர்கள் போலீசாரிடம் சிக்கியுள்ளனர்.


சிக்கியது எப்படி?



லக்கிசராய் மாவட்டத் தில் உள்ள ஹஸன்பூர் உயர் நிலைப் பள்ளியில் 'நீட்' தேர்வு மையம் அமைக்கப்பட்டது. தேர்வு எழுதுவதற்காக குறித்த நேரத்திற்குள் திரளான மாணவ -மாணவியர் ஆர்வமுடன் வந்தனர்.
அப்போது, 'பயோமெட்ரிக்' எனப்படும், கைரேகை, கருவிழி மூலம் அடையாளம் சரிபார்க்கும் நிறுவனத்தின் ஊழியர் என்ற பெயரில், மயங்க் காஷ்யப் என்பவர் பள்ளிக்குள் நுழைந்தார்.

சந்தேகத்தின் பேரில் அவரை பிடித்து விசாரணை செய்ததில், ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதுவதற்காக அவர் வந்தது அம்பலமானது.

பாட்னா மருத்துவ கல்லுாரியில், இவர் மூன்றாம் ஆண்டு எம்.பி.பி.எஸ்., படித்து வருவதும் விசாரணையில் தெரிந்தது. மேலும், இவர் அளித்த தகவலின் அடிப்படையில், லக்கிசராயில் உள்ள மேலும் இரு பள்ளிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத வந்த பனாரஸ் ஹிந்து பல்கலை நர்சிங் மாணவி பூனம் குமாரி, டில்லி, ஷதரா மருத்துவ கல்லுாரியின் அமன் அகர்வால், நாளந்தா மருத்துவ கல்லுாரியை சேர்ந்த சன்ஜீத், அவரது சகோதரர் மற்றும் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி எய்ம்ஸ் மருத்துவ கல்லுாரியை சேர்ந்த சவுரப் ஜா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.


முக்கிய சூத்திரதாரி



அவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த ஆள்மாறாட்ட மோசடி கும்பலை இயக்கிய முக்கிய சூத்திரதாரி கயாவில் உள்ள ஏ.என்.எம்., மருத்துவ கல்லுாரி மாணவர் அர்பித் ராஜ் என்பது தெரியவந்தது.
இவர் ஏற்கனவே, 2024 'நீட்' நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில், சி.பி.ஐ., விசாரணைக்கு ஆளானவர்.

இதையடுத்து அர்பித் ராஜும் கைது செய்யப்பட்டார். மேலும், ஆள்மாறாட்ட மோசடிக்கு உறுதுணையாக இருந்த பயோமெட்ரிக் ஊழியர்கள் 18 பேர் என மொத்தம் 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

'நீட்' மறுதேர்வில் நடக்கவிருந்த மிகப் பெரிய மோசடி தடுக்கப்பட்டாலும், பாதுகாப்பு கெடுபிடிகளை மீறி, போலியான நபர்கள் தேர்வு மையத்திற்குள் நுழைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இது தொடர்பாகவும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வினாத்தாள் கசியவில்லை

என்.டி.ஏ., விளக்கம்

'நீட்' மறுதேர்வின்போதும் வினாத்தாள் கசிந்ததாக வெளியான வீடியோ போலியானது என என்.டி.ஏ., எனப்படும், தேசிய தேர்வு முகமை உறுதிபடுத்தி உள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: நீட் மறுதேர்வு நடந்த நிலையில், வினாத்தாள் கசிந்ததாக சமூக ஊடகங்களில் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோ போலியானது. அதில் இடம் பெற்ற தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை. இதை யாரும் நம்ப வேண்டாம். 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதிய நீட் மறுதேர்வு, வினாத்தாள் கசிவு இல்லாமல் நியாயமாக நடந்து முடிந்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement