பிரிட்டனில் பிரதமர் தற்காலிகம்; 'லேரி' பூனை நிரந்தரம்

5



நமது நிருபர்




பிரிட்டன் பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் பராமரிக்கப்படும் லேரி என்ற 19 வயது பூனை, இதுவரை 6 பிரதமர்களை பார்த்து விட்டது. தற்போதைய பிரதமர் ராஜினாமா செய்துள்ள நிலையில், ஏழாவது பிரதமரை காண காத்திருக்கிறது லேரி.

ஐரோப்பிய நாடான பிரிட்டனில், கடந்த 2024, ஜூலையில் நடந்த பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. பிரதமராக கீர் ஸ்டார்மர் பொறுப்பேற்றார். உட்கட்சியில் ஏற்பட்ட அதிருப்தியால் பதவியை ராஜினாமா செய்வதாக பிரதமர் கீர் ஸ்டார்மர், 63, அறிவித்துள்ளார். ஆளும் தொழிலாளர் கட்சியின் புதிய தலைவராக தேர்வு செய்யப்படுபவர் விரைவில் பிரதமராக பதவியேற்பார்.

பிரிட்டன் பிரதமரின் அதிகாரபூர்வ இல்லம், லண்டனில் 10, டவுனிங் வீதி என்ற முகவரியில் அமைந்துள்ளது. இந்த இல்லத்தில் கடந்த 19 ஆண்டுகளாக லேரி என்ற பூனை பராமரிக்கப்படுகிறது. பிரதமராக கேமரூன் இருந்த காலத்தில் ஊழியர்கள் இந்த பூனையை கொண்டு வந்தனர்.

அன்று முதல் இப்போது வரை, பிரதமர் இல்லத்தில் நிரந்தரமாக தங்கியிருக்கிறது இந்த பூனை. அதற்கு, 'சீப் மவுசர்' என்ற பட்டமும் (தலைமை எலி பிடிப்பவர்) கொடுத்து சிறப்பாக பராமரித்து வருகின்றனர், பிரதமர் இல்ல ஊழியர்கள். பிரதமர்கள் மாறினாலும், ஊழியர்கள் பராமரிப்பில் இருக்கும் இந்த பூனைக்கு எந்த பாதிப்பும் கிடையாது. 'பிரிட்டனில் பிரதமராக இருப்பவர் தான் தற்காலிகம்; லேரி இந்த வீட்டில் என்றும் நிரந்தரம்' என்கின்றனர், பிரதமர் இல்ல பணியாளர்கள்.

பிரதமர் இல்லத்தில் அனைத்து இடங்களிலும் சுற்றித்திரியும் இந்த பூனை, உலகத் தலைவர்கள், அரசு அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் என அங்கு வரும் முக்கியப் பிரமுகர்கள் எடுக்கும் படங்கள், வீடியோக்களில் இருப்பதை காண முடியும்.

தன் ஆயுட்காலத்தில் இதுவரை டேவிட் கேமரூன், தெரசா மே, போரிஸ் ஜான்சன், லிஸ் ட்ரஸ், ரிஷி சுனக், தற்போது ஸ்டார்மர் என ஆறு பிரதமர்களை பார்த்த அந்த பூனை, ஏழாவது பிரதமரின் வருகைக்காக காத்திருக்கிறது. ஏராளமான படங்கள், வீடியோக்கள் வெளியானதால் இந்த பூனையும் சமூக வலைதளங்களில் பிரபலம் ஆகி விட்டது.

அதற்னெ பிரத்யேக சமூக வலைதள பக்கமும் இருக்கிறது. அதை 9 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். பிரதமர் ராஜினாமா முன்னிட்டு, 'எனது தலைமை பணியாளர் ஸ்டார்மரின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டு விட்டேன்' என்று அந்த பக்கத்தில் வெளியான கேலியான அறிவிப்பு, இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement