பைக் மீது மினி பஸ் மோதி திருவண்ணாமலை தம்பதி பலி

காஞ்சிபுரம்: பைக் மீது சிற்றுந்து மோதி, திருவண்ணாமலை தம்பதி பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை, 32; கார் ஓட்டுநர்.

இவர், காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே மனைவி சோனியா, 26 மற்றும் இரு குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்தார். சொந்த ஊருக்கு சென்ற தம்பதி, 'ஹீரோ ஸ்ப்ளெண்டர்' பைக்கில் நேற்று காலை ஒரகடம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

காஞ்சிபுரம், ஓரிக்கை பகுதியில் காலை 9:00 மணியளவில் வந்தபோது, எதிரே வந்த சிற்றுந்து மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே சோனியா உயிரிழந்தார்.

பலத்த காயமடைந்த அண்ணாமலையை, அவ்வழியாக வந்தவர்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அண்ணாமலையும் இறந்தார்.

விபத்து குறித்து, காஞ்சிபுரம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர். தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ள நிலையில், பெற்றோர் இருவரும் இறந்த சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement