கும்மிருட்டில் நெல்லிக்குப்பம் சாலை; அச்சத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி - - நெல்லிக்குப்பம் இடையிலான சாலையில் மின் விளக்குகள் இல்லாததால், இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்துடன் பயணிக்கின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி - நெல்லிக்குப்பம் இடையிலான 11 கி.மீ., துாரமுள்ள சாலையில், பெருமாட்டு நல்லுார், மூலக்கழனி, காயரம்பேடு, கன்னிவாக்கம், ஒத்திவாக்கம், பாண்டூர் உட்பட 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இங்கு வசிப்போர், வேலை, தொழில், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்காக, கூடுவாஞ்சேரி வந்து, அங்கிருந்து ரயில் மற்றும் பேருந்துகள் வாயிலாக பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

இதனால், இந்த வழித்தடத்தில், ஒரு மணி நேரத்திற்கு 2,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிக்கின்றன. இந்த எண்ணிக்கை 'பீக் ஹவர்ஸ்' நேரத்தில், 3,000க்கும் அதிகமான வாகனங்கள் செல்கின்றன.

அதி முக்கிய வழித்தடமாக உள்ள இந்த சாலையில், மின் விளக்குகள் இல்லை. இதனால், வேலை முடித்து மீண்டும் இரவு நேரத்தில் வீட்டிற்கு செல்லும்போது, வாகன ஓட்டிகள் கும்மிருட்டில் பயணிக்கின்றனர்.

இதனால், எதிரே வரும் வாகனங்களோடு மோதி, அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில், 10க்கும் மேற்பட்ட உயிர் பலி ஏற்பட்டுள்ளதாகவும் வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:

கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி., சாலையில் தொடங்கும் நெல்லிக்குப்பம் சாலை, பெருமாட்டு நல்லூர், காயரம்பேடு, கல்வாய் வழியாக நெல்லிக்குப்பம் செல்கிறது.

இதில், கூடுவாஞ்சேரி முதல் காயரம்பேடு வரையிலான 6.6 கி.மீ., துாரம் உள்ள சாலை முறையாக இல்லை.

இந்த வழித்தடத்தில், மூன்று இடங்களில் மட்டும் தலா 100 மீ., நீளத்திற்கு சாலை மைய தடுப்பு எனும் 'சென்டர் மீடியம்' அமைக்கப்பட்டுள்ளது.

மற்ற இடங்களில் இல்லை. தவிர, சில இடங்களில் சாலையின் அகலம் விரிந்தும், குறுகியும் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகளால் சீரான வேகத்தில் பயணிக்க தடுமாற்றம் அடைகின்றனர்.

இரவு நேரத்தில், 60 அடி அகலமுள்ள சாலையில் பயணித்து, திடீரென 25 அடி அகல சாலைக்குள் நுழையும்போது, எதிரெதிரே வரும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து, நேருக்கு நேர் மோதி விபத்துகள் நடக்கின்றன.

ஓ.எம்.ஆர்., சாலையுடன் ஜி.எஸ்.டி., சாலையை இணைக்கும் இந்த பிரதான வழித்தடத்தை, விபத்தில்லா பகுதியாக மாற்ற, மின் விளக்குகள் அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement