முதல்வர் விஜயின் பிறந்த நாளை 52 கிலோ 'கேக்' வெட்டி கொண்டாடிய த.வெ.க.,வினர்

திருப்போரூர்: திருப்போரூரில் முதல்வர் விஜயின் பிறந்த நாளையொட்டி, கவுன்சிலர் குமரன் அரசு ஏற்பாட்டில், த.வெ.க.,வினர் சார்பில் 52 கிலோ 'கேக்' வெட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முதல்வர் விஜயின் 52வது பிறந்த நாள் விழா, திருப்போரூர் பேருந்து நிலையத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை, திருப்போரூர் பேரூராட்சி, 8வது வார்டு கவுன்சிலர் குமரன் அரசு செய்திருந்தார்.

சிறப்பு அழைப்பாளர்களாக த.வெ.க., செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலர் தீனா, தையூர் ஊராட்சி தலைவர் குமரவேல், தண்டலம் ஊராட்சி தலைவர் ஆனந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முதலில், திருப்போரூர் பேருந்து நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 52 கிலோ கேக்கை வெட்டி, பொதுமக்களுக்கு வழங்கி கொண்டாடினர்.

தொடர்ந்து, தொண்டர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. இதில், கேளம்பாக்கம் ஒன்றிய கவுன்சிலர் திவ்யா உட்பட பலர் பங்கேற்றனர்.

அதேபோல, 8வது வார்டு சார்ந்த பொதுமக்கள் மற்றும் பேரூராட்சி துாய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை, கவுன்சிலர் குமரன் அரசு வழங்கினார்.

கடப்பாக்கத்தில் 10 மற்றும் ப்ளஸ் 2 பொது தேர்வில் பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ - மாணவியருக்கு செங்கல்பட்டு த.வெ.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மேகனராஜா பரிசுகள் வழங்கினார். 300க்கும் மேற்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் மேகனராஜா கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

Advertisement