திருப்புவனம் ரேஷன் கடைகளில் பச்சரிசி விநியோகம் நிறுத்தம்

திருப்புவனம், ஜூன் 24-

திருப்புவனம் தாலுகா ரேஷன் கடைகளில் கடந்த இரண்டு மாதங்களாக பச்சரிசி விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

திருப்புவனம் வட்டாரத்தில் 58 முழு நேர கடைகள், 21 பகுதி நேர கடைகள் மூலமாக 38 ஆயிரத்து 82 குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் நியாய விலையில் வழங்கப்படுகிறது. நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் ஏழைகள் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்படும் பொருட்களை நம்பியே உள்ளனர். ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 12 கிலோ முதல் 35 கிலோ பச்சரிசி, புழுங்கலரிசி என இரண்டும் சேர்த்து வழங்கப்படுகிறது. பச்சரிசி பெரும்பாலும் வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல் வைக்க பயன்படுத்துவார்கள். ஆனி, ஆடியில் கோயில்களில் பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம்,

திருப்புவனம் வட்டாரத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு திருமாஞ்சோலை அரசு கிட்டங்கியில் இருந்து அரிசி, பருப்பு, எண்ணெய் விநியோகிக்கப்படுகிறது. இரண்டு மாதங்களாகியும் பச்சரிசி வராதது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திருப்புவனம் தாலுகாவிற்கு ஒரு மாதத்திற்கு 573 டன் அரிசி வழங்கப்படுகிறது. இதில் 40 சதவிகிதம் பச்சரிசியாகும், திருமாஞ்சோலை கிட்டங்கியில் இருந்து திருப்புவனம் தாலுகாவிற்கு 27 டன் துவரம் பருப்பும், 435 டன் சர்க்கரையும், 101 டன் கோதுமையும் வழங்கப்படுகிறது. ரேஷன் கார்டுகள் எண்ணிக்கைக்கு ஏற்ப பொருட்கள் வழங்கப்படாமல், பற்றாக்குறையாகவே பொருட்கள் வழங்கப்படுவதால் ரேஷன் கடைகளில் ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் தினசரி வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.

வட்ட வழங்கல் அலுவலர் ராஜலெட்சுமி கூறுகையில்,

இரு மாதங்களாக பச்சரிசி வழங்கப்படாதது குறித்து தெரியாது, தற்போது தான் பணியில் சேர்ந்துள்ளேன். ஜூலை மாதத்திற்கான பச்சரிசி கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் அனைவருக்கும் பச்சரிசி வழங்கப்படும், என்றார்.

Advertisement