ஆபத்தான முறையில் கொண்டு செல்லப்படும் செங்கற்கள்

திருப்புவனம்:மதுரை பரமக்குடி நான்கு வழிச்சாலையில் வாகனங்களில் எந்தவித பாதுகாப்பும் இன்றி செங்கற்கள் கொண்டு செல்வதால் வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர்.

திருப்புவனத்தை சுற்றிலும் கீழடி கொந்தகை பசியாபுரம் ஜோதிபுரம் அகரம் மணலுார் உள்ளிட்ட பகுதிகளில் 10 க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன . இங்கிருந்து மதுரை விருதுநகர் சிவகங்கை திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செங்கற்கள் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

தேவையான செங்கற்கள் ஒரிடத்தில் தயாரிக்கப்பட்டு அதனை வேக வைக்க மற்றொரு இடத்திற்கு லாரிகளில் கொண்டு செல்கின்றனர். லாரிகளில் எந்த வித பாதுகாப்பும் இன்றி உயரமாக அடுக்கி வைத்துள்ளனர். சிறிய பள்ளங்கள், பேரி கார்டுகள் உள்ள இடங்களை கடக்கும் போது செங்கற்கள் சாலையில் சரிந்து விழ வாய்ப்புண்டு. திருப்புவனம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து மதுரைக்கு ஏராளமானோர் டூவீலர்களில் வேலைக்கு சென்று வருகின்றனர். சாலைகளில் ஆபத்தான நிலையில் செங்கற்கள் கொண்டு செல்வதால் டூவீலரில் செல்பவர்கள் அச்சமடைகின்றனர்.

சரக்கு வாகனங்களில் சரக்குகளை உரிய பாதுகாப்புடனும் மற்ற வாகன ஓட்டிகளுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இன்றி பொருட்களை கொண்டு செல்ல வேண்டும் என்பது விதி . ஆனால் நான்கு வழிச்சாலையில் திருப்புவனம் வட்டாரத்தில் விதிகளை மீறி சரக்கு வாகனங்களில் இதுபோன்று விபத்தை ஏற்படுத்தும் வகையில் பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement