'கிரெட்' நிறுவனத்தை 'மெட்டா' வளைக்க நினைப்பது ஏன்?

2

இந்திய ஸ்டார்ட்அப் உலகில், பல ஆண்டுகளாக விசித்திரமான ஓர் இடத்தைப் பிடித்திருக்கும் நிறுவனம் 'கிரெட்'. ஒருபுறம், இது இந்தியாவின் மிகவும் பிரபலமான 'பின்டெக்' அதாவது நிதிதொழில்நுட்ப பிராண்டுகளில் ஒன்று. கோடிக்கணக்கான பயனர்களின் நம்பிக்கையை வென்றுள்ளது.

ஆரம்பத்தில் கிரெடிட் கார்டு பில்களை செலுத்த உதவும் செயலியாக தொடங்கிய இது, இப்போது கடன் சேவைகள், யு.பி.ஐ., பணப்பரிவர்த்தனைகள், வீட்டு வாடகை கட்டணம், முதலீட்டு சேவைகள் போன்ற பல துறைகளில் தனது காலடியை பதித்துள்ளது.

மறுபுறம், வருவாய் ஆண்டுதோறும் உயர்ந்தாலும், லாபம் இன்னும் கிரெட்-க்கு எட்டாத கனவாகவே உள்ளது. ஆனால், ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், முதலீட்டாளர்கள் அதனால் பயப்படவில்லை.
Latest Tamil News
இந்நிலையில் தான் உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான 'மெட்டா', இந்நிறுவனத்தில் 8,550 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்திருக்கிறது. இந்த முதலீடு நடந்தால், கிரெட்- மதிப்பு 30,000 கோடியில் இருந்து 38,000 கோடி ரூபாயாக இருக்கும்.

இதில் சுவாரஸ்யமான கேள்வி ஒன்று எழுகிறது.

கிரெட்டு-க்கு மெட்டாவின் பணம் தேவைப்படலாம். ஆனால், மெட்டாவுக்கு ஏன் திடீரென கிரெட் தேவை?


வாட்ஸாப் பணம்





இதன் பதிலை புரிந்து கொள்ள, முதலில் மெட்டாவின் நிலையைப் பார்க்க வேண்டும். மெட்டாவின் கீழ் 'பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸாப்' போன்ற உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் தளங்கள் உள்ளன. இந்தியாவில் மட்டும் வாட்ஸாப்பை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்துகிறார்கள்.
அதுமட்டுமல்ல, 'வாட்ஸாப் பே' என்ற பணப்பரிவர்த்தனை சேவையும் மெட்டாவிடம் உள்ளது. அப்படியிருக்க, ஏன் வேறு ஒரு பின்டெக் நிறுவனத்தில் அது முதலீடு செய்ய வேண்டும்?

பதில் எளிதானது. மெட்டா சமூக வலைத்தள உலகில் வெற்றி பெற்றது. ஆனால், இந்தியாவின் பணப்பரிவர்த்தனை உலகில் வெற்றி பெற அந்நிறுவனத்தால் முடியவில்லை. 2018ல் இந்தியாவின் யு.பி.ஐ., புரட்சியை முன்பே உணர்ந்த மெட்டா, அதில் களமிறங்க வாட்ஸாப் பே வசதியை அறிமுகப்படுத்தியது.

ஆனால், அடுத்து வந்த 'கூகுள் பே, போன் பே' ஆகியவை இந்தியர்களின் அன்றாட பழக்கமாக அவற்றை மாற்றிவிட்டன. இப்போது இந்தியாவின் யு.பி.ஐ., பரிவர்த்தனைகளில் 80 சதவீதத்துக்கு மேல், இந்த இரண்டு செயலிகளில்தான் நடக்கின்றன. வாட்ஸாப் செயலியின் பங்கு 0.40 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. இதனால், மெட்டா ஒரு வித்தியாசமான சிக்கலை எதிர்கொண்டுள்ளது.

அதன் வசம் இந்தியாவின் மிகப் பெரிய தகவல் பரிமாற்ற தளம் இருக்கிறது. ஆனால், இந்தியர்களின் மிகப்பெரிய டிஜிட்டல் பழக்கமான பணம் செலுத்தும் முறை, அதன் வசம் இல்லை.


பின்தங்கிய மெட்டா






ஏன் அது முக்கியம்? ஏனெனில், பணம் செலுத்துவது என்பது ஒரு பரிவர்த்தனையின் முடிவு அல்ல. அது ஒரு பெரிய நிதி உறவின் துவக்கம். ஒரு பயனர் தனது பணத்தை ஒரு செயலியிடம் நம்பிக்கையுடன் ஒப்படைக்க தொடங்கியவுடன், அந்த நிறுவனம் அவருக்கு கடன், காப்பீடு, முதலீடு, வணிக சேவைகள் என பலவற்றை வழங்க முடியும்.
அதனால் தான், 'கூகுள் பே, போன் பே, அமேசான் பே, ஆப்பிள் பே' போன்ற அனைத்து பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களும் பணப்பரிவர்த்தனை துறையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் மெட்டா மட்டும் பின்தங்கி விட்டது. இப்போது கதையின் அடுத்த முக்கிய பாத்திரம் கிரெட். இப்போதைய நிலையில், கிரெட் பயனர்கள் கிட்டத்தட்ட ஒரு கோடி பேர் உள்ளனர். ஆனால், இது சாதாரண பயனர் கூட்டம் அல்ல. 750க்கும் அதிகமான 'கிரெடிட் ஸ்கோர்' கொண்டவர்களையே கிரெட் அனுமதிக்கிறது.

அதாவது அதிக வருமானம், அதிக செலவு மற்றும் உயர்ந்த நி தி நம்பகத்தன்மை கொண்ட பயனர்கள். இவர்கள்தான் வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் பிரீமியம் பிராண்டுகள் பல ஆண்டுகளாக அடைய விரும்பி முயற்சி செய்யும் பிரிவில் உள்ள வாடிக்கையாளர்கள்.


பழக்கத்தை வாங்கும் மெட்டா





மேலும், கிரெட் வசம் செயல்பாட்டில் இருக்கும் பயனர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் குறைந்தது மூன்று சேவைகளையாவது பயன்படுத்துகிறார்கள். 2025 நிதியாண்டில் மட்டும் கிரெட் வாயிலாக 8.50 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன.
இதில் மிக முக்கியமானது பணத்தின் அளவு அல்ல, பழக்கம். ஒருவர் ஒரு கட்டண செயலியை தொடர்ந்து பயன்படுத்த தொடங்கிவிட்டால், அதை மாற்றுவது மிகவும் அரிது. மெ ட்டா தற்போது வாங்க விரும்புவது ஒரு நிறுவனத்தை அல்ல, ஒரு பழக்கத்தை தான்.

மேலும், இந்த முதலீட்டின் ஒரு பகுதியாக கிரெட் நிறுவனர் குணால் ஷா, வாட்ஸாப்பின் உயரிய பொறுப்பை பெறுவதுடன், ஆலோசனை பணிகளில் ஈடுபடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது அவரது பின்டெக் அனுபவத்தை மெட்டா பயன்படுத்தும் வழி .

அதாவது மெட்டாவுக்கு பணப்பரிவர்த்தனை உலகில் வெற்றி பெற தேவையான வழி கிடைக்கிறது. கிரெட் மீதான மெட்டாவின் ஆர்வம் மிகவும் முக்கியமானது. இது வெறும் முதலீட்டு ஒப்பந்தம் அல்ல. இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் அடுத்த பெரிய போருக்கான முன்னோட்டம். இனி யார் அதிக கவனத்தை பெறுகிறார்கள் என்பதல்ல போட்டி. யார் நம் நிதி உறவை கட்டுப் படுத்துகிறார்கள் என்பதுதான்.

பணம் செலுத்துவது என்பது ஒரு பரிவர்த்தனையின் முடிவு அல்ல. அது ஒரு பெரிய நிதி உறவின் துவக்கம். ஒரு பயனர் தனது பணத்தை ஒரு செயலியிடம் நம்பிக்கையுடன் ஒப்படைக்க தொடங்கியவுடன், அந்த நிறுவனம் அவருக்கு கடன், காப்பீடு, முதலீடு, வணிக சேவைகள் என பலவற்றை வழங்க முடியும். 

Advertisement