நிறுவன செய்திகள்


ஸ்கொயர் யார்ட்ஸ்

ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான ஸ்கொயர் யார்ட்ஸ், தனது வர்த்தகத்தை அடுத்த
கட்டத்துக்கு விரிவாக்கம் செய்யவும், கடன்களை மறுசீரமைப்பு செய்வதற்கும் ஏதுவாக, முதலீட்டாளர்களிடம் இருந்து 900 கோடி ரூபாய் மூலதனத்தை திரட்டியுள்ளது. இந்த புதிய மூலதன திரட்டுதலை தொடர்ந்து, நுாறு கோடி டாலர் சந்தை மதிப்புடைய 'யூனிகார்ன்' நிறுவனங்களின் பட்டியலில் இந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.


பஜாஜ் கேப்பிடல்

நிதி சேவை நிறுவனமான பஜாஜ் கேப்பிடலின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரியாக, ஜெய் பஜாஜ் நியமிக்கப்பட்டுள்ளார். நிறுவனத்தின் நீண்டகால டிஜிட்டல் உத்திகளை வடிவமைக்கவும், சொத்து மேலாண்மை மற்றும் முதலீட்டு சேவைகள் பிரிவில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை உயர்த்தி, நிறுவனத்தின் வருவாயை மேம்படுத்தவும் இப்பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



ரேமண்ட்

ஆடை மற்றும் ஜவுளி நிறுவனமான ரேமண்ட், ஜெர்மனியை சேர்ந்த விமான பொறியியல் நிறுவனமான 'டெஹார்டே'வை கையகப்படுத்த பேச்சு நடத்தி வருகிறது. சமீபத்தில் இந்நிறுவனம் திரட்டிய 330 கோடி ரூபாயில் 248 கோடி ரூபாயை விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறை சார்ந்த நிறுவனங்களை உலகளவில் கையகப்படுத்துவதற்காகவே ஒதுக்கியிருந்தது. இந்த ஒப்பந்தம் வாயிலாக ரேமண்ட் புதிய துறையில் தடம் பதிக்க உள்ளது.



வோடபோன் ஐடியா

வோடபோன் ஐடியா நிறுவனம், ஆதித்யா பிர்லா குழுமத்தின் துணை நிறுவனத்திற்கு வாரண்டுகள் ஒதுக்கீடு செய்ததன் வாயிலாக 1,182.50 கோடி ரூபாய் திரட்டியுள்ளது. தலா 11 ரூபாய் வீதம் வழங்கப்பட்ட இந்த வாரண்டுக்கான 25 சதவீத தொகை முன்கூட்டியே செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை அடுத்த 18 மாதங்களுக்குள் செலுத்தப்படும். இந்த மூலதனம் வாயிலாக வோடபோன் ஐடியா நெட்வொர்க் வலுவடையும்.



ஆரக்கிள்


அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிள், கடந்த நிதியாண்டில் உலகம் முழுதும் கிட்டத்தட்ட 21,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக தனது ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் தனது ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் ஏ.ஐ., தொழில்நுட்பத்துக்கு மாற்றி அமைத்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்திலும் இத்தகைய பணி நீக்கங்கள் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஹிந்துஸ்தான் ஜிங்க்

ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம், தனது நிலத்தடி சுரங்க செயல் பாடுகளில் பசுமை ஹைட்ரஜனை பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய, அட்வான்டெக் அசோசியேட்ஸ் மற்றும் ஏரோ ஈகிள் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. கார்பன் உமிழ்வை குறைத்து, சுற்றுச்சூழலுக்கு சாதகமான உத்திகளுக்கு மாறும் நோக்கில், சுரங்க துறையில் இந்த முன்னோடி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

Advertisement