சிறுமலையில் மண் அள்ளும் வாகனங்களுக்கு அனுமதி மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

திண்டுக்கல்: விவசாயிகள் சிரமத்தை கருதி சிறுமலையில் மண் அள்ளும் வாகனங்களுக்கு விரைந்து அனுமதி வழங்க வேண்டும் என மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வலியுறுத்தினர்.

திண்டுக்கல் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக்குழு கூட்டம் நடந்தது. கண்காணிப்புக்குழு தலைவர் திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம் தலைமை வகித்தார். கலெக்டர் துர்கா முன்னிலை வகித்தார். அனைத்துத்துறை அலுவலர்கள், நகராட்சி தலைவர்கள், வளர்ச்சி ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் மாநகராட்சி பாதாள சாக்கடை திட்டம், தேசிய ஊரக குடிநீர் வழங்கும் திட்டம், ஜல்ஜீவன் மிஷன் உள்ளிட்ட 37 திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டறிந்தனர்.

கூட்டத்தில் நடந்த விவாதம் நாகராஜ், குழு உறுப்பினர்: மதுரை திண்டுக்கல் பைபாஸ் ரோட்டில் இயங்கும் அரசு, தனியார் பஸ்கள் அம்மைநாயக்கனுார் ஊருக்குள் வருவதில்லை. கொடைரோடு ரயில்வே ஸ்டேஷன் இருந்தும் பஸ்கள் ஊருக்குள் வந்து செல்லவில்லை. இதனால் பஸ் ஸ்டாண்டில் இருந்து ரயில்வே ஸ்டேஷன் செல்ல ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் பெறுகின்றனர்.

கலெக்டர்: எஸ்.பி.,யிடம் பேசி தாசில்தார் தலைமையில் குழு அமைத்து இம்மாதிரி பிரச்னைகள் உள்ள பகுதிகளை கண்காணிக்க அறிவுறுத்தி உள்ளேன்.

உமாமகேஸ்வரி, தலைவர், பழநி நகராட்சி: ஆன்மிக நகரான பழநியில் பக்தர்கள் வீசி செல்லும் குப்பை உட்பட 36 டன் அகற்ற ஒப்பந்ததாரர் நியமிக்கப்பட்டுள்ளார். நாள் ஒன்றுக்கு 18 டன் அதிகமாக 54 டன் குப்பையை சேகரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். கூடுதல் ஆட்கள் தேவை.

கலெக்டர்: ஆய்வு செய்து ஆட்கள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஹிந்து சமய அறநிலையத்துறை இடும்பன் கோயில் பகுதியில் சேகரமாகும் குப்பையின் அளவை அளந்து கூற கேட்டுள்ளனர். அதனை அறநிலையத்துறைக்கு நகராட்சி கூற வேண்டும்.

கந்தசாமி, துணைத்தலைவர், பழநி நகராட்சி: பழநி மருத்துவர் நகர் முதல் புளியமரத்து செட் வரை 6.6 கி.மீ., ரோட்டில் விவசாயிகள் சாகுபடி செய்த வேளாண் பொருட்களை கொண்டு செல்ல ரோடு அமைக்க வேண்டும்.

கலெக்டர்: திட்ட இயக்குனருடன் ஆய்வு செய்து ரோடு அமைக்க ஏற்பாடு செய்கிறேன்.

சச்சிதானந்தம் எம்.பி.,: முன்னோடி வங்கி சார்பில் மங்களம்கொம்பு, அரவக்குறிச்சி ஆகிய இடங்களில் ஏ.டி.எம்., மெஷின் அமைக்க வேண்டும். தாண்டிக்குடி வரை மொபைல் ஏ.டி.எம்., பயன்பாடு அவசியமாக உள்ளது. மக்கள் நலன் கருதி ஏற்பாடு செய்ய வேண்டும்.

நாகராஜ், குழு உறுப்பினர்: சிறுமலையில் மண் அள்ளும் வாகனங்கள் பயன்பாட்டிற்கு அனுமதி வழங்குவதில் காலதாமதம் ஆகிறது. இதனால் விவசாயிகள் சிரமப் படுகிறோம்.

நாகசதீஸ்கிடிஜாலா, மாவட்ட வன அலுவலர்: சிறுமலைக்கு செல்லும் மண் அள்ளும் இயந்திர வாகனங்கள் மரங்கள் வெட்டுதல், அனுமதித்ததை தவிர வேறு பணிகள் செய்வது ஆய்வில் தெரியவந்துள்ளது. கலெக்டரின் ஒப்புதலுடன் அனுமதி வழங்கப்படும்.

கலெக்டர்: வருவாய்த்துறை, வனத்துறை அனுமதி பெற்று அனுமதி வழங்க ஒரு வாரம் ஆகும். விரைவில் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கிறோம்.

குருசாமி, குழு உறுப்பினர்: உலக பழங்குடியின தின விழா கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படுகிறது. ஆனால் பழங்குடியினருக்கு அழைப்பிதழ் அனுப்பப்படாமல் விழா நடத்தப்படுகிறது.

கலெக்டர்: ஆதிதிராவிடர் நல அலுவலகம் பட்டியல் படியும், சங்கங்களுக்கு மட்டும் அழைப்பிதழ் வழங்காமல் பழங்குடியினர் அனைவருக்கும் அழைப்பிதழ் முறையாக அனுப்ப வேண்டும்.

சச்சிதானந்தம் எம்.பி.,: குடிநீர் வடிகால்வாரியத்தில் பணிகள் முடியும் முன்பே நிதி வழங்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு செயற்பொறியாளர் ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement