கடலுாரில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் மாநகராட்சி... அலட்சியம்:போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி

1

கடலுார்: கடலுார் நகரில் பெருகி வரும் ஆக்கிரமிப்புகளால் தினம் தினம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடலுார் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. புதுச்சேரி மாநில எல்லையில் இருந்து கடலுார் முதுநகர் வரை மாநகராட்சி எல்லை பரவியுள்ளது.

மாநகரத்தில் மட்டும் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர்.

இது தவிர சுற்றுப்பகுதியில் உள்ள கிராமங்களில் இருந்து, 2 லட்சத்திற்கும் அதிகமானோர் மாநகராட்சிக்குள் வந்து செல்கின்றனர். இதற்கிடையே மாநகராட்சியை சுற்றியுள்ள, 14 கிராமங்கள் மாநகராட்சியுடன் இணைக்கும் முயற்சி வேகமாக நடந்து வருகிறது.

புதுச்சேரியில் இருந்து தென் மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், தஞ்சாவூர், திருச்சி, ராமேஸ்வரம், காரைக்கால், கன்னியாகுமரி உள்ளிட்ட பல முக்கிய பகுதிகளுக்கு செல்லும் பஸ் கடலுார் வழியாகத்தான் செல்கிறது. இதனால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. லாரன்ஸ் ரோட்டில் வாகனங்கள் செல்லவே முடியவில்லை.

தேரடித்தெருவில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்த இடமில்லாததால் சாலையிலேயே நிறுத்தப்படுகின்றன. இந்த சாலை முழுவதும் கடைகள் தான் உள்ளன.

ஒவ்வொரு கடைக்காரரும் தமது கடை முன்பு வாகனங்கள் நிறுத்தாவண்ணம் ஏதாவது இரும்புதடுப்பு ஏற்படுத்தி வைக்கின்றனர்.

தேரடித்தெருவில் இருந்து வரும் வாகனங்கள், லாரன்ஸ் சுரங்கப்பாதை வழியாக செல்லும் வாகனங்களும் ஒரே நேரத்தில் சங்கரநாயுடு ரோடு பக்கம் செல்வதால் போக்கவரத்து நெரிசல் ஏற்படு கிறது. சின்னவாணித்தெருவில் இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. கடலுார் முதுநகர் சாலை மணிக்கூண்டு அருகே காலை நேரத்தில் சாலையின் இருபுறமும் மீன் கடைகளால் போக்குவரத்து இடையூறால் வாகனங்கள் செல்ல மிகவும் கடினமாக உள்ளதால் போலீசார்கள் கடைக்காரர்களிடம் மல்லு கட்ட வேண்டியுள்ளது. மஞ்சக்குப்பம், அங்காளம்மன் கோவில் தெருவில் இரு புறமும் ஆக்கிரமிப்பினால் வாகனங்கள் செல்ல முடியவில்லை.

இதை தட்டிக்கேட்க வேண்டி மாநகராட்சி 'கப் சிப்' என வாய்மூடி மவுனம் சாதித்து வருகிறது.

இந்நிலையில் புதியதாக பொறுப்பேற்றுள்ள மாநகராட்சி கமிஷனர் ஆக்கிரமிப்புகளை படிப்படியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகர மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement