வெயிலின் தாக்கத்தால் விளைச்சல் பாதிப்பு: வெற்றிலை விலை உயர்வு
திருப்புவனம்: வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வெற்றிலை விளைச்சலில் கடும் பாதிப்பு ஏற்பட்டதால், திருப்புவனம் வட்டாரத்தில் வெற்றிலையின் விலை உயர்ந்து வருகிறது.
தென்மாவட்டங்களில் திருப்புவனம், சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளில் பெருமளவு வெற்றிலை பயிரிடப்படுகிறது. வெற்றிலையில் பல ரகங்கள் இருந்தாலும் திருப்புவனத்தில் சிறுகாமணி, கற்பூரம் உள்ளிட்டவைகள் அதிகளவு பயிரிடப்படுகிறது. திருப்புவனம் வட்டாரத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெற்றிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மற்ற விவசாயத்தை போல அல்லாமல் வெற்றிலை விவசாயம் கூட்டு தொழிலாக செய்யப்படுகிறது. வெற்றிலை பயிரிட்டு ஆறு மாதத்திற்கு பிறகுதான் வெற்றிலை அறுவடை தொடங்கும். குறைந்த பட்சம் மூன்று ஆண்டு வரை வெற்றிலை அறுவடை நடைபெறும். 15 நாட்களுக்கு ஒரு முறை வெற்றிலை கிள்ளப்படும். ஏக்கருக்கு ஆயிரத்து 500 முதல் 2 ஆயிரம் கிலோ வெற்றிலை வரை கிடைக்கும். கிலோ 140 முதல் 160 ரூபாய் வரை விற்பனை செய்த வெற்றிலை தற்போது கிலோ 200 ரூபாயாக உயர்ந்து விட்டது.
தற்போது ஆனி என்பதால் கிராமப்புறங்களில் சிவாலயங்களில் ஆனி திருவிழா நடைபெறுவதால் வெற்றிலையின் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஆவணி, புரட்டாசி என முகூர்த்த மாதங்களும் வர உள்ளதால் இன்னும் சில மாதங்களுக்கு வெற்றிலை விலை குறைய வாய்ப்பில்லை. திருப்புவனம் பகுதி வெற்றிலைகள் சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை ராமநாதபுரம், பரமக்குடி, மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு தினசரி அனுப்பி வைக்கப்படுகிறது.
வெற்றிலை விவசாயிகள் கூறுகையில், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வெற்றிலை கொடிகளில் விளைச்சல் குறைந்துள்ளது. வெற்றிலைக்கு தொடர்ந்து ஈரப்பதமும் இருக்க வேண்டும், வெயிலும் வேண்டும். கடும் கோடை வெயில் காரணமாக தண்ணீர் பாய்ச்சினாலும் போதுமானதாக இல்லை. 3 நாட்கள் மழை பெய்தும் வெயில் காரணமாக நிலம் காய்ந்து விட்டது. ஆனி திருவிழாக்கள், முகூர்த்த நாட்கள், விளைச்சல் பாதிப்பு காரணமாகவே விலை அதிகரித்துள்ளது. நபர் ஒருவர் 50கிலோ வரை பறிப்போம், வெயில் காரணமாக விளைச்சல் குறைந்துள்ளதால் 5 முதல் 10கிலோ வரையே பறிக்க முடிகிறது, என்றனர்.
மேலும்
-
வேளாண் பொருட்கள் சந்தை நிலவரம் (23.6.2026)
-
மின்சார டூ - வீலர் ஆலையை ஈர்க்க தமிழக அரசு பேச்சு 'கிரெட்' நிறுவனத்தை 'மெட்டா' வளைக்க நினைப்பது ஏன்?
-
மின்சார இருசக்கர வாகன ஆலை தமிழகத்துக்கு ஈர்க்க அரசு பேச்சு
-
பி.எஸ்.எல்.வி., தொழில்நுட்பம் தனியாருடன் பகிர ஆலோசனை
-
இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த பேச்சு
-
ரூ.211 கோடிக்கு வீடு வாங்கிய 'பிரஷ்வொர்க்ஸ்' நிறுவனர்