விருத்தகிரீஸ்வரர் கோவிலில்  திருநங்கைகள் அட்டகாசம்

விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவிலில் திருநங்கைகள் வலுக்கட்டாயமாக பணம் பெறுவதால், பக்தர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.

விருத்தாசலத்தில் 2,500 ஆண்டுகள் பழமையான விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு காசியை விட வீசம் பெருசு, விருத்தகாசி என பழமையான ஆன்மிக பெயரும் உண்டு.

தினசரி காலை, மதியம், மாலை, இரவு என நான்குகால பூஜைகளிலும் ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்கின்றனர். அதுபோல், அன்னதானம், பூஜைகளுக்கு பக்தர்கள் கட்டணம் செலுத்தி, நேர்த்திக்கடன் நிறைவேற்றி வருகின்றனர்.

இந்நிலையில், கோவிலின் பிரதான கிழக்கு கோபுர வாசலில் திருநங்கைகள் வழிமறித்து, பக்தர்கள் தலையில் கை வைத்து, வலுக்கட்டாயமாக பணம் பெறுகின்றனர். பக்தர்கள் நகர்ந்து சென்றாலும் விடாமல் விரட்டிச் சென்று, பணம் கேட்டுப் பெறுகின்றனர்.

பணம் தராத பக்தர்களை ஒருமையில் அவதுாறாக பேசுவது போன்ற முகம் சுழிக்கும் செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால், கோவிலுக்கு மன நிம்மதி தேடி வரும் பக்தர்கள், மனஉளைச்சலுக்கு ஆளாகும் அவலம் தொடர்கிறது.

இது தொடர்பாக, கோவில் நிர்வாகம் மற்றும் போலீசாரிடம் புகார் தெரிவித்தாலும், திருநங்கைகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்கிறது. எனவே, கோவிலில் அத்துமீறும் திருநங்கைகள் மீது நடவடிக்கை எடுக்க எஸ்.பி., தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

Advertisement